துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது: ஜிவி!
தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம்மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது என நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் பதிவு செய்துள்ளார்
தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம்மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது என நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் பதிவு செய்துள்ளார்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.
இதையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 2 ஆயிரத்திற்கும் கூடுதலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டம் காரணமாக தூத்துக்குடியில் நேற்று இரவு 10 மணி முதல், நாளை காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே காவல் துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் சிலர் போலீசாரின் வாகனம் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முற்றுகையிட முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது.
போராட்டக்காரர்கள் காவல் வாகனத்தை கவிழ்த்தும், கல்லெறிந்தும் நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கானோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் நுழைந்தனர். போரட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 2,000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட டிவீட்டர் பதிவில்,
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி , துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.
சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்... வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.