மூன்றாம் பாலினத்துக்கு பெருமை சேர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி!!
தமிழக சுகாதாரத் துறையில் லேப் டெக்னீஷியன் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு முதன்முறையாக 2 திருநங்கைகளை நியமித்து அவர்களுக்கு எடப்பாடி அரசு பெருமை சேர்த்துள்ளது.
தமிழக சுகாதாரத் துறையில் லேப் டெக்னீஷியன் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு முதன்முறையாக 2 திருநங்கைகளை நியமித்து அவர்களுக்கு எடப்பாடி அரசு பெருமை சேர்த்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், மூன்றாம் பாலினர்களான எஸ். நேயா மற்றும் எம்.பி. செல்விசந்தோசம் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் முறையே ஆய்வக நுட்புனர் நிலை-II (Lab Technician Grade-II) மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் நிலை-II (Physiotherapist Grade-II) பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மூன்றாம் பாலினர் நலனிற்காக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூன்றாம் பாலினர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவது, அரசு நலத் திட்டங்களை அவர்கள் பெறுவதற்கு ஏதுவாக "மூன்றாம் பாலினர் நல வாரியம்" அமைத்தது, அரசு வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது, போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வார்டு மேலாளராக பணியாற்றி வரும் எஸ். நேயா மற்றும் எம்.பி. செல்விசந்தோசம் ஆகிய இரண்டு மூன்றாம் பாலினர்களும், அவர்களை முறையான பணியிடத்தில் நியமனம் செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். எஸ். நேயா, நுண்ணுயிரியல் படிப்பில் முதுகலை பட்டமும், எம்.பி. செல்விசந்தோசம், இயன்முறை சிகிச்சையில் பட்டயமும் பெற்றுள்ளனர். இவர்கள் அதிக கல்வித்தகுதி பெற்று இருந்தும் வயது வரம்பை கடந்து விட்டதால், அரசு இவர்களின் கோரிக்கையை சிறப்பு நேர்வாக ஏற்று, அரசு மருத்துவமனைகளில் அவர்களை முறையே ஆய்வக நுட்புனர் நிலை-II மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் நிலை-II ஆகிய பணி இடங்களில் முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்து, அதற்கான பணிநியமன ஆணைகளை, தமிழக முதலமைச்சர் இன்று எஸ். நேயா மற்றும் எம்.பி. செல்விசந்தோசம் ஆகிய மூன்றாம் பாலினர் இருவருக்கும் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் இன்பசேகரன், சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.