வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: தமிழக அரசின் முடிவு என்ன?- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்துள்ளது. இந்நிலையில் எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு (Vanniyar community) மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு (Reservation) வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.
இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். எம்பிசி பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் 25க்கு மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனிடையே, அவசரம் கருதி தினந்தோறும் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டி இருப்பதால் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு தினந்தோறும் நீதிபதிகள் விசாரணை நடைபெற்றது. அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தற்போது வன்னியர் சமுதாயத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5% உள் இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த 23-ம் தேதி இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் எனத் தீர்ப்பளித்து, மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | வன்னியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும்...உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில் தமிழக அரசு என்ன முடிவெடுக்க உள்ளது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. இச்சூழலில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ''மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
எந்த ஒரு பிரிவினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கிட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான தரவுகள் சரியாக இல்லை என்றும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் சரியான ஆதாரங்களின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், கலைஞர் கொண்டு வந்த, அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள் ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசரக் கோலத்தில் அள்ளித்தெளித்தது போல சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான் உச்ச நீதிமன்றத்தால் இச்சட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.
முதல்வர் அறிவுறுத்தியபடி, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழு மூச்சுடன் மேற்கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்'' என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | வன்னியர் 10.50% உள் இட ஒதுக்கீடு; உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சாதகமானதே: ராமதாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G