கோவையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.14 கோடி நில அபகரிப்பு..! உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?
கோவையில் போலி ஆவணங்கள் மூலம் 14 கோடி ரூபாய் நில அபகரிப்பு தொடர்பான புகாரில் 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (73). இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு காளீஸ்வரன், குமாரசாமி ஆகியோரிடமிருந்து கணபதி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 43 சென்ட் இடத்தை வாங்கினார். இடத்தை வாங்கிய ராஜாராம் அந்த இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பெயர் பலகை போர்த்தி இருந்தார். ஆடிட்டரான ராஜாராம் கடந்த 2004 ஆம் ஆண்டு வேலை விஷயமாக வெளிநாடு சென்று விட்டு 2011 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். வாங்கி வைத்திருந்த இடத்தில் வீடு கட்டலாம் என ராஜாராம் நேரில் சென்று பார்த்தபோது அங்கு அவருக்கு சொந்தமான 43 சென்ட் இடத்தில் 18 சென்ட் இடத்தில் வேறு சிலர் வீடுகளை கட்டிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் படிக்க | அதிமுக பாஜக கூட்டணி முறிவு: எடப்பாடி பழனிசாமி தான் உண்மையை சொல்லணும் - அண்ணாமலை
சி.எம் நகர் என்ற பெயரில் ராஜாராமுக்கு சொந்தமான இடத்தை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு இருந்தது அவருக்கு தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீதமுள்ள காலி இடத்திற்கு கம்பி வேலி அமைத்த பின்னர் இது குறித்து விசாரித்தபோது கோவை கணபதி பகுதியில் உள்ள சி.எம் கல்யாண மண்டபம் உரிமையாளர் ராஜு என்கிற ஆறுமுகம் 2006 ஆம் ஆண்டு சுமார் 19 ஏக்கர் நிலத்திற்கு போலியான ஆவணங்களை தயாரித்து அதில் ராஜாராமுக்கு சொந்தமான இடத்தை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக பிரித்து விற்றது தெரியவந்தது. மேலும் விசாரித்தபோது சி.எம் மண்டபம் உரிமையாளர் ராஜு தயாரித்த போலி ஆவணங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பிற நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் 2006 ஆம் ஆண்டு கோவை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சி.எம் மண்டபம் உரிமையாளர் ராஜு என்கிற ஆறுமுகத்திற்கு நிலத்தில் எவ்வித உரிமையும் சம்பந்தமும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து பொதுமக்கள் யாரும் சி.எம் மண்டபம் உரிமையாளர் ராஜு என்கிற ஆறுமுகமிடமிருந்து இடம்பெறுவதாக ஏமாற வேண்டாம் என்று 2006 ஆம் ஆண்டு பத்திரிகை தாளில் வெளியிடப்பட்டது. விபரங்கள் அனைத்தையும் பிற உண்மையான நில உரிமையாளர்களிடம் தெரிந்து கொண்ட ராஜாராம் அதை தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு கோவை மாநகர நில அபகரிப்பு போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ராஜாராமிற்கு சி.எம் மண்டபம் உரிமையாளர் ராஜு கொலை மிரட்டல் விடுத்தும் வழக்கை வாபஸ் வாங்குமாறும் பல முறை அச்சுறுத்தி கொண்டே வந்துள்ளார். அதில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜாராமிற்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டு உடல் நலம் சரியில்லாமல் போனது.
இதை தொடர்ந்து ராஜாராமின் மகன் வெங்கட் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வந்த போது தனது தந்தைக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததும் அதற்கு புகார் அளித்திருந்த விபரமும் தெரிய வந்தது. தொடர்ந்து வெங்கட் மாநகர நில அபகரிப்பு பிரிவு போலீசில் மீண்டும் புகார் அளித்து விரைவாக விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ராஜாராமின் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்பனை செய்ததாக சி.எம் கல்யாண மண்டப உரிமையாளர் ராஜு என்கிற ஆறுமுகம் உட்பட ஆறுமுக கவுண்டர் என்பவரின் மகன் நாச்சிமுத்து, அவரது சகோதரர் சின்னையா, சின்னையா கவுண்டரின் மனைவி முருகாத்தாள், சி.எம் மண்டப உரிமையாளர் ராஜுவின் மனைவி சகுந்தலா, சக்தி இன்ஜினியரிங் கல்லூரி சீலன் மனைவியும் ராஜுவின் மகளுமான ஸ்ரீமதி உட்பட ஆறு பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் 2022 ஆம் ஆண்டு ராஜு போலி ஆவணங்கள் மற்றும் அதன் மூலம் கிரயம் செய்த அனைத்து ஆவணங்களை ரத்து செய்ய கோவை மாவட்ட பதிவாளரிடம் ராஜாராம் தரப்பில் அவரது மகன் வெங்கட் புகார் அளித்தார். புகாரை விசாரித்த மாவட்ட பதிவாளர் அனைத்து போலி ஆவணங்களையும் ரத்து செய்து ஆணையிட்டார். மேலும் சி.எம் கல்யாண மண்டப உரிமையாளர் ராஜு உட்பட ஆறு பேர் நில அபகரிப்பு போலீசார் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அவர்கள் கடந்த மாதம் சி.எம் கல்யாண மண்டபம் உரிமையாளர் ராஜு என்கிற ஆறுமுகம் உட்பட ஆறு பேர் மீது திட்டமிட்டு போலி ஆவணங்கள் மூலம் ராஜாராமின் இடத்தை அபகரித்து விற்றது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும், நில அபகரிப்பு பிரிவு போலீசாரும் வழக்கின் குற்றப்பத்திரிக்கையை விரைவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ