கோவை மாவட்ட அதிமுக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் கனரக வாகனங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கொடி அசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தார். முன்னதாக நிவாரண பொருட்களின் தரம் குறித்த ஆய்வு செய்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. புயல் வளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் பொதுமக்களை சந்தித்து நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் கோவையில் இருந்து நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையின் தற்போதைய சூழலுக்கு திமுக அரசின் நிர்வாக திறமையின்மை தான் காரணம். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையின் வெள்ளத்தின் போது செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை திறந்து விட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டதாக  தவறான தகவல்களை திமுகவினர் பொதுமக்களிடம் பரப்பினர். ஆனால் உண்மை நிலை அதுவல்ல, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சுமார் 35 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வெளியேற்ற முடியும்.


150 க்கு மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிறைந்து வெளியேறி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதன் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டது. அப்போது இரண்டே நாட்களை தாம்பரத்தில் அதிகபட்சமாக சுமார் 51 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. ஒவ்வொரு ஆண்டுகளின் இறுதியிலும் மழை அதிகபட்சமாக பொழிவது வழக்கமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும். கடந்த ஆட்சி காலங்களில் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் மூலம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 


தனியார் உதவியுடன் 1500 க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைத்திருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2015 ஆம் ஆண்டில் பெருவெள்ளத்தின் போது 2 லட்சம் டன் குப்பைகள் அகற்றப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் துரித நடவடிக்கையாக உணவுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. ஆனால் இப்போது சென்னை மாநகரம் முழுவதுமாக முடங்கியுள்ளது. 


முறைப்படி திட்டமிட்டு திமுக அரசு எந்த பணியையும் செய்யவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. தகவல் தொழில்நுட்ப அணியை வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் திமுக அரசு சென்னையில் மீட்டு உள்ளதா என்பது மக்களுக்கே தெரியும். சமூக வலைத்தளங்கள் மூலம் வெற்று விளம்பரம் செய்து திமுக அரசியல் செய்து வருகிறது" என தெரிவித்தார்.