தமிழகம் முழுவதும் 3 மணி நேரம் திடீர் மின்வெட்டு - இது தான் காரணமா?
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரம் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று திடீரென ஒரே நேரத்தில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். திருச்சி மாவட்டத்தின் உறையூர், ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம் பகுதிகளில் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்க முடியாமல் வீதிகளை நோக்கி படையெடுத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் பகுதிகளில் 2 முதல் 3 மணி நேரம் நிலவிய மின் தடை காரணமாக புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தனர்.
இதேபோல், திருவண்ணாமலை, தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு ஏற்பட்ட மின் தடையால் சிறு குறு வியாபாரிகள், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடலூர், கரூர் மாவட்டங்களிலும் தொடர் மின் வெட்டு ஏற்பட்டது. குறிப்பாக வெயில் சுட்டெரித்து வரும் கோடை காலத்தில் இதுபோன்ற மின்வெட்டு ஏற்பட்டதால் நோயாளிகள்,குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் மின் விசிறி இயக்க முடியாமல் புழுக்கத்தில் தவித்தனர்
இந்த நிலையில் மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் தடை பட்டதாலேயே இந்த திடீர் மின் வெட்டு ஏற்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 750 மெகா வாட் மின்சாரம் திடீரென தடைபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க தமிழக மின் வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டதாகவும், ஊரகப் பகுதிகளில் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க | எரிபொருள் பற்றாக்குறை..இனி 10 மணி நேர மின் வெட்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR