“பாரோர் பலருள் சீரோர் சிலரே, சீரோர் சிலரில் சீலர் இவரே” என்ற வாக்கினிற்கேற்ப பலர் அவ்வப்போது இந்த உலகில் தோன்றி மனித குலத்திற்கு ஒப்பற்ற தொண்டாற்றி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவராய் நாம் இருக்கும் காலத்தில் இந்த பூமியில் நடமாடிய புனித மனிதர் மருத்துவர் திருவேங்கடம் (Doctor Thiruvengadam) அவர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வியாசர்பாடியில் திருவேங்கடம் அவர்கள் பொதுமக்களுக்கு 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். தான் கற்ற மருத்துவப் படிப்பிற்கான உண்மையான பொருள் சேவை செய்வதே அன்றி பணம் ஈட்டுவது அல்ல என்ற கருத்தை அவர் ஆணித்தரமாக நம்பினார், அதையே தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார்.


ஆரம்ப காலகட்டங்களில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த திருவேங்கடம் அவர்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகு 5 ரூபாய்க்கு ஏழை மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வந்தார்.


ஆகஸ்ட் 13 ஆம் தேதி, அவர், உடல் நலக்குறைவு காரணமாக, ரயில்வே மருத்துவமனையில் அனுமப்திக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமையன்று காலமானார்.


மருத்துவர் திருவேங்கடத்தின் மறைவு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பணம் பின்னால் அலையும் இந்த உலகத்தில் சேவை மனப்பான்மையை தன் தலையாய கடமையாகக் கொண்டிருந்த உன்னத மனிதர் அவர்.


நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் வந்த 5 ரூபாய் மருத்துவர் கதாப்பாத்திரம், மருத்துவர் திருவேங்கடத்தை முன்மாதிரியாகக் கொண்டு சித்தரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மருத்துவர் திருவேங்கடத்தின் மறைவுக்கு பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


முதல்வர் பழனிசாமி, “5 ரூபாய் டாக்டர் (5 Rupee Doctor) என அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் மறைந்த செய்தி வேதனையளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவ சேவை வழங்கியவர்” என்று கூறியுள்ளார்.


ALSO READ: தமிழக காவல்துறையின் வீர மங்கை: கண்ணீரை மறைத்து கடமையாற்றிய மகேஸ்வரி!!


திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம்!. எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.


மருத்துவர் திருவேங்கடம் போன்றவர்கள் நம் மத்தியில் இருந்தார்கள் என்பது நாம் பெருமை பட வேண்டிய விஷயமாகும். அதோடு நிறுத்தி விடாமல், அவர் வாழ்ந்து காட்டிய விதத்தில் நாமும் வாழ முயல வேண்டும். நாம் செய்யும் எந்த ஒரு பணியாயினும், அதில் சுய நலம் பாராமல் பொது நலம் கருதி உழைத்தால், நாமும் நன்றாக இருக்கலாம், நாடும் நலம் பெறும்!!  


ALSO READ: இணையத்தில் வைரலாகும் வயதான தம்பதியினரின் ரொமான்ஸ் வீடியோ!