தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1755 ஆக உயர்வு: சுகாதாரத்துறை
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை போடப்பட்டு உள்ளது. அனைத்து மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா நோயில் இருந்து 866 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 114 பேர் தமிழகத்தில் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை போடப்பட்டு உள்ளது. அனைத்து மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முழுமையான ஊரடங்கு உத்தரவு இருக்கும் எனவும், சென்னை, கோவை, மதுரையில் 26-ஆம் தேதி காலை முதல் 29 ஆம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும், சேலம், திருப்பூரில் 26 ஆம் தேதி காலை முதல் 28 ஆம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,452 ஆக வும், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 723 எனவும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 4,814 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமை 394 புதிய கோவிட் -19 வழக்குகள் மற்றும் 18 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மொத்த தொற்று நோயின் எண்ணிக்கை 6,817 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் மொத்தம் 957 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.