தேசிய மருத்துவ ஆணையம்; மக்களவையில் ஆ.ராசா எதிர்ப்பு!
தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ.ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ.ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
1956-ஆம் ஆண்டு துவங்கி செயல்பாட்டில் இருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலை ரத்து செய்து அதற்கு மாற்றாய் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மருத்துவ கல்வியில் புதிய சீர்த்திருத்தங்களை அமல்படுத்துவதற்கு வகைசெய்யும் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா, தனியாருக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவின்படி, எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி ஆண்டில் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்) என்ற பெயரில் பொதுவான தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்ச்சேர்க்கை மேற்கொள்ளப்படும். அத்துடன், எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த பின்னர் மருத்துவராக பணியாற்றுவதற்கு உரிமம் பெறுவதற்கான தேர்வாகவும் இது இருக்கும். மேலும், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயின்ற மாணவர்களுக்கான தர நிர்ணயத் தேர்வாகவும் இது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறையிலும் பொதுப்பட்டியல் உள்ள மருத்துவக்கல்வியிலும் மத்திய அரசு நுழைவது கண்டிக்கத்தக்கது என கூறி திமுக உறுப்பினர் ஆ.ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தில் இடம்பெறப் போகும் 25 பேரில் யாரும் மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அல்ல. தற்போதுள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக கொண்டு வரப்படும் மருத்துவ ஆணையத்தில் ஜனநாயகம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.