"காவிரி டெல்டா மக்களைப் பழிவாங்குவதில் அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகள் போட்டிப்போட்டுச் செயல்படுகின்றன என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதை தொடர்ந்து, கஜா புயல் நிவாரண நிதி குறித்து தமிழக அரசை மத்திய அரசும், மத்திய அரசை தமிழக அரசும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், காவிரி டெல்டா மக்களைப் பழிவாங்குவதில் அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகள் போட்டிப்போட்டுச் செயல்படுவதாகவும், புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயக்கடன் மற்றும் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழக திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 


அந்த அறிக்கையில், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று தினமும் நடக்கும் தீவிர போராட்டங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. காவிரி நீர் கடைமடைப் பகுதிக்கு இந்த ஆட்சியில் போகாதது போல், கஜா புயலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் போய் சேரவில்லை. நிவாரணப்பணிகள் நிலை குலைந்தும், நிவாரண உதவிகள் ஸ்தம்பித்தும் கிடக்கின்றன.


பாதிப்பு குறித்து அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பிலும் அ.தி.மு.க அரசு செய்துள்ள குளறுபடிகளாலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் கிடைக்கப்போவதில்லை என்ற சந்தேகமும் மக்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. வயிற்றுப்பசிக்கு போராடிய மக்களையும், வாழ்வாதாரத்தை தொலைத்த மக்களையும் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்வதிலும், ஆலங்குடியில் போராட்டம் நடத்திய மக்களுக்கு நீதிமன்றமே வழங்கிய ஜாமீனை ரத்துசெய்ய உயர்நீதிமன்றத்தில் மனு போடுவதிலும் அக்கறை காட்டும் அ.தி.மு.க அரசு, மத்திய அரசிடம் கஜா பேரிடர் நிதி பெறுவதற்கு அரசியல் ரீதியாக ஒரு சிறிய அழுத்தத்தை கூட இதுவரை கொடுக்கவில்லை.


கஜா பேரிடர் நிதியாக ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்த பிறகும், முதல்-அமைச்சர் அதுபற்றி மத்திய அரசுக்கோ அல்லது பிரதமருக்கோ எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் எதிர்க்கட்சிகளை தனக்கே உரிய பாணியில் அநாகரிகமாக அர்ச்சனை செய்ய அரசு விழாவை பயன்படுத்துகிறார்.


மத்திய பா.ஜ.க. அரசுக்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் கலாட்டா செய்யும் அ.தி.மு.க. எம்.பி.க்கள், கஜா புயல் குறித்த விவாதத்தின்போது கூட அவையில் இருந்து பேசி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தயாராக இல்லை. மத்திய குழு கஜா புயல் சேதங்களுக்காக முதல்- அமைச்சரை சந்தித்து விட்டு சென்று 25 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த மத்திய குழு பரிந்துரைகள் கொடுத்ததாகவும் தெரியவில்லை.


இந்த பரிந்துரையின்படி மத்திய அரசு எந்த கஜா பேரிடர் நிதியையும் ஒதுக்கவில்லை. ஆகவே, காவிரி டெல்டா மக்களை பழிவாங்கும் தொடர் நிகழ்வுகளாக மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு, அப்பாவி மக்களையும், விவசாயிகளையும் விரக்தியில் தள்ளி போராட வைப்பது மிகுந்த வேதனைக்குரியது.


ஆகவே, கஜா புயல் பாதிப்பில் சிக்கி அவதிப்படும் அப்பாவி மக்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக நிவாரண உதவிகள், ஆங்காங்கே அனைத்து கட்சி குழுக்கள் அமைத்து அவர்கள் முன்னிலையில், வழங்கிடவும், அந்த மாவட்டங்களில் விவசாயக்கடன் மற்றும் கல்வி கடன்களை ரத்துசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தங்களது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க மத்திய மந்திரிகளையும், பிரதமரையும் அவ்வப்போது சந்திக்கும் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க அமைச்சர்களும், கஜா பேரிடர் நிதியை உடனே பெறுவதற்கு உரிய பேரழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், பா.ஜ.க.விற்கு பாதுகாப்பு மதிலாக இருந்து நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு பதிலாக, கஜா புயல் பாதிப்பு பேரிடர் நிதியை பெற உருப்படியான, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க எம்.பி.க்களும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.