ஓ.பி.எஸ். அனுப்பிய கடிதம் வரவில்லை, திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் - கே.பி.முனுசாமி
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க இரட்டை தலைமைகளான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த கட்சியும் இரு பிரிவுகளாக தனித்து பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதால் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனிடையே அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''அதிமுக-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து பல முறை பொதுக்குழுவை கூட்டிய நிலையில் இப்போது அதே மண்டபத்தில் இடம் இல்லை எனக்கூறுவது ஏற்புடையதாக இல்லை. ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை குறித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே குழப்பமான சூழ்நிலை நிலவுவதால் பொதுக்குழு கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும்'' என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். அதிமுகவின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஆதரவாக உள்ளனர். ஒருசில குழப்பவாதிகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பொதுக்குழு கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.
மேலும் படிக்க | பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைங்க : EPSக்கு OPS கடிதம்
பொதுக்குழுவை ஒத்திவைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றிருந்தால் இது குறித்து எடப்பாடி பழனிசாமி எங்களிடம் தெரிவித்திருப்பார். ஆனால் அப்படி எதுவும் அவர் எங்களிடம் கூறவில்லை.
பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அதிமுகவின் உட்கட்சி தேர்தலை சுட்டிக்காட்டி சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என அப்போது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்படுமா என இப்போது கூற முடியாது. அதிமுக பொதுகுழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக வருவார். பொதுக்குழுவில் பங்கேற்று தனது கருத்துகளை அவர் எடுத்துரைப்பார். பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகளை ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். இருவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் பாதுகாப்பு தொடர்பாக OPS, EPS தரப்பு தனித்தனியாக மனு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR