அதிமுக , பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் முரண்பாடுகளின் மொத்த உருவங்களாக உள்ளன என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரட்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை ஆதரித்து திருச்சி உழவர் சந்தையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், திமுக, காங்கிரஸ் கூட்டணி கொள்கைக் கூட்டணி என்றும், எதிர் தரப்பினரின் கூட்டணி கொள்ளைக் கூட்டணி என்று கூறினார்.


மேலும் அவர் பேசுகையில், கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக 37 எம்.பி.க்களை பெற்றதால் தமிழகத்திற்கு என்ன பயன் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவினர் எதிர்ப்பை சந்திப்பதாகவும், காலணி வீசும் அளவுக்கு மக்களின் கோபம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
பிரியாணி, தேங்காய் கடைகளில் பொருள் வாங்கிவிட்டு திமுகவினர் பணம் கொடுப்பதில்லை என எடப்பாடி பழனிசாமி பேசுவதாகக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இது ஒரு முதலமைச்சர் பேசுகிற பேச்சா என வினவினார். காது ஜவ்வு கிழிந்துவிடும் என்று முதலமைச்சர் பேசுவதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கையே கிழியப் போகிறது என்றும் திமுக தலைவர் கூறினார். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த காலம் போய், விவசாயிகளை தள்ளுபடி செய்யும் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.