சென்னை: தமிழகத்தில் ஆளும் அதிமுக-வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், சசிகலாவை ஆதரித்துள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேசமயம், கவர்னர் அழைக்கும்போது ஒன்றாக செல்வதற்கு வசதியாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில், எம்.எல்.ஏ.க்களை மீட்கக்கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, எம்.எல்.ஏ.க்கள் கட்டாயப்படுத்தி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 20 பேர் சாப்பிடாமல் இருப்பதாகவும் கூறப்பட்டது.


இந்த குற்றச்சாட்டு குறித்து வரும் திங்கட்கிழமைக்குள் தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், சாப்பிடாமல் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு சாப்பாடு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.