சசிகலாவின் அறிக்கைக்கு பதிலடியாக EPS, OPS வெளியிட்ட போராட்ட கூட்டறிக்கை
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் OPS மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் EPS கூட்டாக கையெழுத்திட்டு போராட்ட அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட தலைநகரங்களில் வரும் 9ஆம் தேதி அதிமுக வின் சார்பாக போராட்டம் நடைபெறும் என்று EPS,OPS இணைந்து அறிக்கை விடுத்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை
1882 இல் “மேஜர் ஜோன் பென்னிகுயிக்” என்பவர் தான் முல்லை பெரியாறு அணையை கட்ட முயற்சி மேற்கொண்டு பல சவால்களை தாண்டி 1895 இல் அணை கட்டி முடிக்கப்பட்டது. தென் தமிழக மக்களின் நீர் தேவையை நிவர்த்தி செய்த இவர் இன்றும் அப்பகுதி மக்களால் போற்றப்படுகிறார். இந்த அணை தமிழக கேரள எல்லையில் இருந்தபோதிலும் அணை தமிழ் நாட்டின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
மேலும் அணையில் 100 அடிக்கு மேல் நீர் உயரும் போது தான் முல்லை பெரியாறு அணையில் இருந்து வைகையாற்றுக்கு நீர் திறந்து விடப்படும். 152 அடி கொள்ளளவுடைய இந்த அணையின் நீர் மட்டம் உயர்கின்ற போது மட்டுமே தமிழ்நாட்டிற்கு (Tamil Nadu) நீர் திறக்கப்படும். இல்லாத பட்சத்தில் அந்த நீர் கேரளாவுக்கே திரும்பி சென்றுவிடும். அப்படி திரும்பி செல்லும் பட்சத்தில் 14 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.
இருப்பினும் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர முன்வருவதில்லை. மேலும் 2006 ம் ஆண்டு கேரள சட்டசபையில் 136 அடி தண்ணீர் மட்டுமே தேக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்தது. இயல்பாகவே மதுரையை சுற்றியுள்ள வறட்சி மிகுந்த மாவட்டங்கள் நன்னீரை பெற்றுக்கொள்ள இந்த அணையே முக்கிய காரணமாகும். மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் விவசாயமும் அதனோடு இணைந்த தொழில்களும் வளர்ச்சிக்கு இந்த அணையே காரணமாகும்.
உச்சநீதிமன்ற வழக்கும் தீர்ப்புகளும்
1979-ம் ஆண்டு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்த மத்திய நீர்வள ஆணையம் நீரர்மட்டத்தை குறைக்க வேண்டும், அதனை தொடர்ந்து அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீர் இருப்பு 152 அடியில் இருந்து 142.2 ஆகவும் பின்னர் 136 அடியாகவும் குறைக்கப்பட்டு பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் குறைக்கப்பட்ட 136 அடியிலிருந்து 142 அடியாக நீர் இருப்பை உயர்த்த கேரள அரசு அனுமதி மறுத்தது.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) வழக்கு தொடர்ந்தது 2006ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் நீர் இருப்பின் அளவை 142 அடியாக உயர்த்திக்கொள்ளவும், அணையை வலுப்படுத்தும் பணிகள் முடிந்த பின்னர் 152 உயர்த்திக்கொள்ளவும் அனுமதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் 2006-ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கேரள சட்டமன்றத்தில் அணை பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தது தமிழக அரசு இதை தொடர்ந்து 2010ம் ஆண்டு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
ALSO READ: கனமழை காரணமாக கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு, 2012ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக உள்ளதாகவும், நில அதிர்வுகளால் கூட அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வல்லுனர் குழு அறிக்கை அளித்ததை தொடர்ந்து 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது அதில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி (அதாவது 43.28 மீட்டர்) தண்ணீர் தேக்க அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், 2006-ல் கேரள சட்டமன்றத்தில் 136 அடி மட்டுமே தண்ணீர் தேக்க அனுமதிக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டத்தையும் ரத்து செய்தது. மேலும் பேபி அணை, சிற்றனை பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் 152 அடி நீரை தேக்கி வைத்துக்கொள்ளலாம் எனவும், இதற்கு கேரள அரசு எந்தவித மறுப்பும் தெரிவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.
அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. இவ்வாறு முன்னதாக நடந்த நிகழ்வுகளை அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது. தொடர் சட்டப் போராட்டம் நடத்தி பெறப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு இன்றைக்கு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும் என்றும், 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டால் மட்டுமே கடைமடைப் பகுதிகளான சிவகங்கை,
ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும், குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீர் உறுதி செய்யப்படும். ஆனால் கேரள அரசு மீண்டும், மீண்டும் முல்லைப் பெரியாறு அணை குறித்து உண்மைக்குப் புறம்பாகவும், தவறான தகவல்களின் அடிப்படையிலும் எழுப்பி வரும் பிரச்சனைகளுக்குப் பணிந்து, சில நாட்களுக்கு முன்னர் அணையில் நீர் 138 அடியை நெருங்கும் நேரத்திலேயே கேரள அமைச்சர்கள், அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழ் நாடு அரசு நீரை திறக்க மதகுகளை உயர்த்தி இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை தமிழ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த் தேக்கம். அந்த அணையில் நீர் இருப்பை கண்காணிப்பது போல, கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்து அவர்களது மேற்பார்வையில் மதகுகளைத் திறந்தது, முல்லைப் பெரியாறு அணையின் மீது தமிழகத்திற்கு உள்ள உரிமைகாள
கேள்விக்குறியாக்கும் செயல் என்பதை நீண்ட அரசியல் அனுபவமுடைய அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு நினைவு படுத்துவதாகவும் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு, அதன் மூலம் தென் தமிழ் நாட்டின் 5 மாவட்டங்களில், குறிப்பாக கடைமடைப் பகுதியான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதற்கு அதிமுக அரசு முன்னெடுத்த சட்ட ரீதியிலான போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டும் வகையில், தற்போதைய தமிழ் நாடு அரசு உறுதித் தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும், மேலும் காவேரி நீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகளையும், பாலாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும்; முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரங்களிலும், எந்தச் சூழ்நிலையிலும் உறுதி குலைந்துவிடாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை
மனதில் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து திமுக அரசுக்கு செயல்படவேண்டும்.
ALSO READ: சசிகலா சொல்லும் நரகாசுரன் யார்? அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிதண்ணீர் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் திமுக அரசின் நிலைப்பாட்டிளையும், மாநில மக்களின் உரிமைக்காகப் போராடுவதில் திமுக அரசு காட்டும் மெத்தன போக்கையும் கண்டித்து, அதிமுக சார்பில் வருகின்ற 09.11.2021 - செவ்வாய்க் கிழமை காலை 11 மணியளவில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத் தலைநகரங்களில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதாகவும் அப்போராட்டத்தில்
மேற்கண்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க, கழகத்தின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயப் பெருங்குடி மக்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறப்பட்டுள்ளது.
முன்னதாக சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என கையெழுத்திட்டு நேற்றைய தினம் தீபாவளி வாழ்த்தறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடியாகவும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் OPS மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் EPS கூட்டாக கையெழுத்திட்டு போராட்ட அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 2வது நாளாக 1,000-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு; அதிகரித்த கொரோனா பலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR