குற்றாலம் பேரூராட்சியைக் கைப்பற்றியது அதிமுக.!
குற்றாலம் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. குறிப்பாக, தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சித் தலைவர் தேர்தல் சர்ச்சைக்குரியதாகவே இருந்தது.
குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளன. அதில் நடந்துமுடிந்த பேரூராட்சித் தேர்தலில் 4 வார்டுகளில் திமுகவும், 4 வார்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றன. இரு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதால் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. முதல் முறை கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தலைவர் பதவிக்கான தேர்தல் தள்ளிப்போனது. இரண்டாவது முறை நடைபெற்ற தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் யாரும் வராததால் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் சிக்கல் நீடித்து வந்தது.
மேலும் படிக்க | குற்றாலம் போற ஐடியா இருக்கா ? - இதை தெரிஞ்சுக்கோங்க..!
இந்நிலையில் 3வது முறையாக இன்று தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த முறை எந்தக் காரணம் கொண்டும் தேர்தல் தள்ளிப்போக கூடாது என்றும், அதற்கான உரிய நடவடிக்கை எடுத்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜை, தென்காசி மாவட்ட அதிமுக செயலாளர்களான செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தெற்கு), எம்.எல்.ஏ., கிருஷ்ணமுரளி (வடக்கு) ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். இதனையடுத்து குற்றாலம் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த முறை 8 கவுன்சிலர்களும் வருகை தந்தனர்.
குற்றாலம் பேரூராட்சித் தலைவராக திமுக சார்பில் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் குமார் பாண்டியனும், அதிமுக சார்பில் முன்னாள் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் கணேஷ் தாமோதரனும் போட்டியிட்டனர். இதையடுத்து, நடைபெற்ற வாக்கெடுப்பில் 5 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் கணேஷ் தாமோதரன் வெற்றிபெற்றார். இதன்மூலம், குற்றாலம் பேரூராட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.
குற்றாலம் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியதை அடுத்து அக்கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சித் தலைவராக வெற்றி பெற்ற கணேஷ் தாமோதரன், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தொடர்ந்து அவ்வழியே வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் படிக்க | குற்றால அருவியில் இரவு நேர குளியல்; சுற்றுலா பயணிகள் குஷி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR