முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து, தற்போது திமுக-வின் தலைவருக்கான தேர்தல் நாளை நடத்தப்படவுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 26 ஆம் நாள் மாலை 4 மணிக்குள் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் தற்போது திமுகவின் செயல் தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின் நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வாகி உள்ளார். இதுக்குறித்து நாளை நடைபெறும் திமுக செயற்குழு கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக வரலாற்றில், அதன் இரண்டாவது தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். இதற்கு முன்பு கருணாநிதி மட்டும் அந்த பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மறைந்த கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வாகி உள்ளார் என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி, திமுகவில் தன்னை சேர்க்க மறுத்தால், கடும் விளைவிகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். அவருக்கு பக்கபலமாக அவரது (மு.க. அழகிரி) மகன் தயா அழகிரி "திமுக-வின் நிரந்தர தலைவர் கருணாநிதி மட்டுமே" என மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறித்து ஆலோசனை செய்து வருகிறார் அழகிரி. அடுத்த மாதம் செப்டம்பர் 5 ஆம் நாள் மிகப்பெரிய பேரணி நடத்தி ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன் எனவும் கூறியுள்ளார்.


மு.க. அழகிரி கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள், மறைந்த கருணாநிதியால் திமுக கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். தற்போது திமுகவின் தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின், என்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்  எனவும். திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். 


திமுக கட்சிக்கு அதிகம் பணியாற்றியவர் யார் என்று பார்த்தால், அழகிரியை விட ஸ்டாலின் தான் முன்னால் நிற்க்கிறார். மு.க. ஸ்டாலினிடம் இருக்கும் அரசியல் சித்தாந்தம், மு.க அழகிரிடம் இல்லை என்பதே உண்மை.


இந்நிலையில், நாளை திமுகவின் இரண்டாவது தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். அவர் பதவியேற்ற பிறகு, மு.க. அழகிரி குறித்து விவாதிக்கப்படுமா? என்பது குறித்து வரும் நாட்களில் தான் பதில் தெரியும்.


திமுகவின் பெரும் ஆளுமை என கருதப்பட்ட மு. கருணாநிதி மறைவுக்கு பின்னர், அழகிரியின் செயல்பாடுகளை குறித்து, இதுவரை ஸ்டாலின் நேரடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.