சென்னையில் 900 பேர் பங்கேற்ற மது விருந்து: அளவுக்கு அதிகமான போதையில் 21 வயது இளைஞர் பலி!
சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற மதுவிருந்தில் பங்கேற்ற 21 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் மையப்பகுதியான கோயம்பேடு அருகே அமைந்துள்ளது வி.ஆர்.மால். இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், துணி, செல்போன் மற்றும் நகை கடைகள், திரையரங்கங்கள் என சகல வசதிகளும் உள்ளன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். வார விடுமுறை தினங்களில் இன்னும் அதிகமாக மக்கள் கூடுவதால் வணிக வளாகமே கூட்ட நெரிசலாக காணப்படும்.
இந்த நிலையில் வணிக வளாகத்தின் நான்காவது தளத்தில் பிரேசிலை சேர்ந்த 'MANDRAGORA' என்ற உலகப் பெற்றவரின் பெயரால் DJ ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க ஆன்லைன் மூலம் ரூ.1500-க்கு டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும், இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு முறையாக அனுமதி பெறாமல் மதுவிருந்தும் நடைபெறுவதாக சென்னை அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்ப்ரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று திருமங்கலம் மற்றும் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து 900-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றிருந்ததும் அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், 21-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் மது விருந்து அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் படிக்க | சென்னை மக்களே உஷார், மே 23 முதல் ஹெல்மெட் கட்டாயம்
இதனால் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திய போலீஸார் மதுவிருந்தில் பங்கேற்ற அனைவரையும் வணிக வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அத்துடன், அங்கிருந்த 844 விலை உயர்ந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த துரை, விக்னேஷ், பரத் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
முன்னதாக மது விருந்தில் பங்கேற்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட அவரது நண்பர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியிருந்ததாலும், மேலும் சில போதை வஸ்துக்களை பயன்படுத்தியிருந்ததாலும் சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே பிரவீனை போன்று மதுவிருந்தில் பங்கேற்ற மற்றவர்களும் போதைப்பொருட்களை பயன்படுத்தினார்களா? எனும் கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையின் மையப்பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்ற மதுவிருந்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பாலிதீன் கவரில் இருந்து பெட்ரோல்! கல்லூரி மாணவன் அசத்தல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR