மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு பணியிடங்களின் இடஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-


மாற்றுத் திறனாளிகளை அரசு பணியிடங்களில் பணி அமர்த்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.


1981-ம் ஆண்டிலிருந்தே மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக் கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா 1 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.


மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சத வீதம் இட ஒதுக்கீடு  நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீதம் இடஒதுக்கீட்டினை, 4 சதவீதமாக தமிழக அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.


அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு பணிகளில் செய்யப்பட விருக்கும் 4 விழுக்காடு ஒதுக்கீட்டில்..


(எ) பார்வை குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும்,  


(பி) செவித்திறன் குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும்,


(சி) கை, கால் பாதிக்கப்பட்டோர் (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) 1 சதவீத மும்,


(டி) புறஉலகு சிந்தனையற்றோர், அறிவுசார் குறை பாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மேலே (எ) முதல் (டி) வரையிலுள்ள பிரிவுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்டோர்களுக்கு (செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண் டாலும்  பாதிக்கப்பட்டோர் உட்பட) 1 சதவீதமும்  என  ஒதுக்கீடு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.  அதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. 


இந்த 4 சதவீத இட ஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறு வனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.