கொளுத்தும் வெயில்.. நாளை முதல் கோயில்களில் இலவசமாக நீர்மோர் வழங்க அரசு ஏற்பாடு
தமிழ்நாட்டில் 48 கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கோயில்களில் கயிற்றால் ஆன விரிப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்படவுள்ளதாகவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னை முத்தையால்பேட் இப்ராஹிம் தெருவில் ரூபாய் 96,17,000 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு உள்ள உருது நடுநிலைப்பள்ளியின் வகுப்பறைகளை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கப்பன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலை பள்ளி ரூபாய் 2,08,28,000 மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்கள். இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ வெயிலின் தாக்கத்தால் கோயிலுக்குள் கருங்கல் பதித்த தரையோடு இருக்கக்கூடிய இடங்களில் பக்தர்கள் கால்கள் சுடாமல் இருக்க மேட் அமைக்கப்படும். மேலும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கவுள்ளோம். முதற்கட்டமாக 48 முதல் நிலை கோயில்களில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. நாளை கபாலீஸ்வரர் கோவிலில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறேன் என தெரிவித்தார்.
ஜூன் அல்லது ஜூலை பழனியில் உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது என்றும் சோளிங்கரில் ரோப் கார் திட்டத்தை தொடங்கி வைத்ததற்கு மக்கள் முதலமைச்சரை பாராட்டுகின்றனர். மத்திய சென்னை தொகுதியில் முதலமைச்சர் நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்வோம். கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து நிகழ்வுகளிலும் மக்களோடு அனைத்து நேரங்களிலும் நின்றவர். 2019 ஆம் ஆண்டு தயாநிதி மாறன் நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் மத்திய சென்னையில் அவர் கால் படாத இடங்களே இல்லை என்ற அளவிற்கு மக்கள் பணியாற்றியுள்ளார் என பேசினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், இன்று மட்டும் 6.5 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறோம் என்றும் அதிமுகவினராக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு தற்போது பள்ளிக்கூடம் கட்டியுள்ளோம் என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ