மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என பேரவையில் திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் போராட்டங்கள் முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி நாகை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மன்னார்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மீதான விவாதத்தில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளிக்கையில், "தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை. எந்த நிறுவனத்திற்கும் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியும் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை என்பது தான் உண்மை. மத்திய அரசே அனுமதி அளித்தாலும், தமிழக அரசின் ஒப்புதலை பெற்று தான் செயல்படுத்த முடியும்" என்று பேசினார்.



மேலும், திமுகவின் ஆட்சியில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதற்கு, திட்ட ஆய்வுக்கு மட்டுமே திமுக அனுமதி அளித்தது என்று திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் பதில் அளித்தார். தொடர்ந்து திமுக - அதிமுக தரப்பினரிடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.