நெய்வேலியில் உச்சக்கட்ட பதற்றம்: அன்புமணி ராமதாஸ் கைது - வெடித்தது கலவரம்
நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் கலவரம் வெடித்தது. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் ஏற்படுள்ளது.
கடலூரில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நெய்வேலியில் இருந்து என்எல்சி நிறுவனத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார். எவ்வளவு விலை கொடுத்தாலும் விளைநிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என கூறிய அவர், நெல் வயல்களை அழித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டாயம் பதில் கூறியே ஆக வேண்டும் என வலியுறுத்தினார். எக்காரணத்தைக் கொண்டும் என்.எல்.சி 2 விரிவாக்கப் பணிகளை அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்த அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டுவிட்டு விவசாயத்தை அழித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
என்எல்சி பிரதான நுழைவு வாயில் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்திற்கு பிறகு, அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைவதற்காக புறப்பட்டனர். இதனை காவல்துறை தடுத்து நிறுத்தியதால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக 10 மாவட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு, தடுப்பு வேலிகளை அமைத்து பாமகவினரை தடுத்தனர். இருப்பினும் பாமகவினர் காவல்துறையினர் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதால் கலவரம் வெடித்தது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில், தொண்டர்கள் அங்கிருந்த காவல்துறை வாகனங்கள் மற்றும் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசியும், குச்சி கம்புகளைக் கொண்டு அடிதடியும் நடத்தினர். இதனால் அங்கு கலவரம் வெடித்து போர்க்களம்போல் காட்சியளித்தது.
உடனடியாக அங்கு இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. காவல்துறை சார்பில் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். எஞ்சியவர்களை கைது செய்து அன்புமணி ராமதாஸ் தங்க வைக்கப்பட்டிருக்கும் திருமண மண்டபத்துக்கு காவல்துறை அழைத்துச் சென்றது. கலவரம் வெடித்தைத் தொடர்ந்து அங்கு தெண்மண்டல ஐஜி தலைமையில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியும் காவல்துறை ஈடுபட்டுள்ளது. உளவுத்துறை இதனை முன்கூட்டியே எச்சரித்திருந்தது. அதற்காக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் கலவரம் வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மின்கம்பம் விழுந்து விபத்து... துண்டான விளையாட்டு வீரரின் கால் - கதறும் தாய்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ