சமூக நீதி காவலர் வி.பி. சிங்குக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சமூக நீதி காவர்ல் வி.பி. சிங்குக்கு தமிழகத்தில் மண்டபம் கட்ட வேண்டுமென்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் 92-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரையின் ஒரு பகுதியை ஏற்று மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால்தான், இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் வி.பி.சிங் இணையற்ற தலைவராக உயர்ந்து நிற்கிறார். மத்திய அரசு வேலை வாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் நடைமுறைப்படுத்தியதால் தான், பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா முயற்சியால் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அந்த இட ஒதுக்கீட்டை நீட்டிக்க முடிந்தது.
பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்போராட்டத்தால் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு சாத்தியமானதற்கு வி.பி.சிங் அமைத்துக் கொடுத்த அடித்தளம் தான் காரணம். வி.பி.சிங் மட்டும் மண்டல் ஆணைய அறிக்கையை செயல் படுத்தியிருக்கா விட்டால், இன்று வரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தேசிய அளவில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்ததுடன் வி.பி. சிங் ஓய்ந்து விடவில்லை. அது செயல் படுத்தப்படுவதற்காகவும் போராடினார். 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும் அதை நரசிம்ம ராவ் அரசு செயல்படுத்த தாமதித்ததால், இட ஒதுக்கீடு செயலாக்கப்படும் வரை டெல்லிக்குள் நுழைய மாட்டேன் என்று கூறி தலைநகரை விட்டு வி.பி.சிங் வெளியேறினார்.
அவரது இந்த போராட்டத்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது. வி.பி.சிங் மட்டும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் இருந்திருந்தால், உயர்வகுப்பு மக்களின் முழுமையான ஆதரவுடன் அடுத்து வந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்திருக்கலாம்.
மேலும் படிக்க | கைலாசாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு தூது விடும் நித்தி - அடுத்த அலப்பறை
ஆனால், ஆட்சிக் கணக்கைப் போடாமல், சமூகநீதிக் கணக்கை போட்டதால் தான் அவர் சமூகநீதிக் காவலராக போற்றப்படுகிறார். சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக போராடிய வி.பி.சிங்கின் வரலாற்றை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதற்கு வசதியாக அவரது வரலாறு தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பாடமாக சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் சென்னையில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய பிரமாண்ட மணிமண்டபமும் அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR