தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.


இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின. தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


தற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப்பெற வேண்டும். மேலும் விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எனவே ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது தெளிவாகிவிட்டது.