‘அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தால் அக்கட்சி பதிவை ரத்து செய்து வெளியேற்ற வேண்டும்’ என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘மு.க.ஸ்டாலினை முதல்வராக்க டிடிவி தினகரன் உழைத்துக் கொண்டிருக்கிறார் எனவும், அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தால் அக்கட்சி பதிவை ரத்து செய்து வெளியேற்ற வேண்டும்’ எனவும் குறிப்பிட்டு பேசினார். மேலும் டிடிவி பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவரா? சுதந்திர போராட்ட தியாகியா? எனவும் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.


நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் தமிழத்தில் மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைப்பெற்றது. அதே வேளையில் காலியானதாக அறிவிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.


இந்நிலையில் தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் மீதம் உள்ள 4 தொகுதிகளில் (திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம்) இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.


அந்தவகையில் இன்று மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடைப்பெற்ற பிரச்சார கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசினார். பிரச்சாரத்தின் போது அவர் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சியினரை கடுமையாக சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.