இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களிடம் மக்கள் மீண்டும், மீண்டும் ஏமாறுவதும், அத்தகைய மோசடி நிறுவனங்களை முளையிலேயே கிள்ளி எறிய காவல்துறை தவறுவதும் மிகுந்த கவலையளிக்கின்றன. வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த எல்.என்.எஸ். சர்வதேச நிதிச் சேவை நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பித் தர அந்த நிறுவனம் மறுப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. அந்த நிறுவனத்தின் முதலீட்டு முகவராக செயல்பட்டு வந்த வேலூர் மாவட்டம் சேவூரைச் சேர்ந்த வினோத் குமார், தம்மை நம்பி முதலீடு செய்த மக்களின் பணத்தை மீட்டுத் தர முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சியில் நேற்று முன்நாள் தற்கொலை செய்து கொண்ட பிறகு தான் சம்பந்தப்பட்ட நிறுவனம் செய்த மோசடியின் தீவிரம் தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்.என்.எஸ். சர்வதேச நிதிச்சேவை நிறுவனம் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் ஒரு லட்சம் பேரிடம் ரூ.6,000 கோடியை முதலீடாக பெற்று ஏமாற்றியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆரூத்ரா கோல்டு நிறுவனம் 93,000 பேரிடம் ரூ.2125 கோடியையும், திருச்சியைச் சேர்ந்த எல்பின்ஸ் நிதி நிறுவனம் 7,000 பேரிடமிருந்து ரூ,.500 கோடியையும் முதலீடாக வசூலித்து திருப்பித் தராமல் ஏமாற்றியிருப்பதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்திருக்கிறது. மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் தொகை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.


மேலும் படிக்க | துறைமுக நுழைவாயிலை சரிசெய்து மீனவர்கள் இறப்புகளை தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்


ஆண்டுக்கு 30% வரை வட்டி வழங்குவதாக மோசடி நிதி நிறுவனங்கள் கூறியதை மக்கள் அப்படியே நம்பியது தான் இந்த மோசடிக்கு காரணம் ஆகும். அதிக வட்டி, நட்சத்திர விடுதிகளில் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துதல், முதலீடு செய்வதவர்களில் ஒரு சிலருக்கு அதிக வட்டியை வழங்கி, அவர்கள் மூலம் மக்களிடம் வாய்மொழி பிரச்சாரம் செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலம் தான் வாடிக்கையாளர்களை மோசடி நிறுவனங்கள் கவர்ந்திழுத்து ஏமாற்றுகின்றன. இவை புதிய தந்திரங்கள் இல்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதே தந்திரத்தைக் கடைபிடித்து தான் மோசடி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகின்றன. ஆண்டுக்கு 30% வட்டி வழங்குவது சாத்தியம் தானா? என்ற அடிப்படை வினாவை தங்களுக்குள் எழுப்பாமல், அதிக வட்டிக்கு ஆசைப்படுவது தான் மக்கள் ஏமாறுவதற்கு முதன்மைக் காரணம். இத்தகைய ஏமாற்றத்தைத் தவிர்க்க மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.


தமிழ்நாட்டில் மோசடி நிறுவனங்கள் காளான்களைப் போல உருவெடுத்து மக்களை ஏமாற்றுவதற்கான காரணங்களில் மக்களின் விழிப்புணர்வின்மை 10% என்றால், மீதமுள்ள 90% காவல்துறையின் அலட்சியம் தான். 2 லட்சம் மக்களிடம் ரூ.8,625 கோடி மோசடி செய்துள்ள மூன்று நிதி நிறுவனங்களும் கடந்த மாதம் தொடங்கி இந்த மாதம் மூடப்பட்டவை அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே அந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிக வட்டி தருவதாகவும், பரிசுகளை அள்ளி வழங்குவதாகவும் அந்த நிறுவனங்கள் துண்டறிக்கைகள் மூலமாகவும், முழுபக்க விளம்பரங்கள் மூலமாகவும் தொடர் விளம்பரங்களை செய்தன. இவை எதுவும் தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. பொதுமக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தது தான் அத்தனைக்கும் காரணம் என்று இப்போது கூறும் காவல்துறை, மோசடி நிறுவனங்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அவ்வாறு செய்யாமல் அவர்களை தடுத்த சக்தி எது?


தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் பொதுமக்களிடம் மோசடி செய்த எந்த நிறுவனத்திடமிருந்தும் மக்களின் பணத்தை முழுமையாக மீட்டெடுத்துக் கொடுக்க காவல்துறையால் முடியவில்லை. குறைந்த பட்சம் இத்தகைய மோசடி நிறுவனங்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும். அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. அந்தக் கடமையை செய்வதில் காவல்துறை தோற்றுவிட்டது.


3 நிதி நிறுவனங்களும் மோசடி செய்த தொகையில் 10% கூட இன்னும் மீட்கப்படவில்லை; அவற்றின் சொத்துகளும் முடக்கப்படவில்லை. மோசடி நிறுவனங்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 420 போன்ற சாதாரண பிரிவுகளில் தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவன உரிமையாளர்கள் எளிதாக தப்பிவிடக் கூடும். சொத்துகள் முடக்கப்படாத நிலையில் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் முதலீட்டை மீட்டெடுத்து வழங்குவதற்கான வாய்ப்புகளும் குறைவு ஆகும். மோசடி நிதி நிறுவனங்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் மோசடி நிறுவனங்கள் குவித்துள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்பட வேண்டும்.


பொதுமக்களிடம் வாங்கிக் குவித்த முதலீடுகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காக அமலாக்கப் பிரிவின் மூலமும் விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ