ஆடி கார் ஐஸ்வர்யா: ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
சென்னை திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையில் முனுசாமி என்ற முதியவரை கடந்த 2-ம் தேதி அதிகாலையில் வேகமாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில், முனுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை குடிபோதையில் வேகமாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக சேத்துப்பட்டையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யா வில்டன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு, கீழ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இதன்படி, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், ஜாமீன் கேட்டு ஐஸ்வர்யா வில்டன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியதாவது:- இந்த விபத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் குடிபோதையில் காரை ஓட்டவில்லை. இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரியதாக்கியதால், குடி போதை யில் வாகனத்தை ஓட்டியதாக என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் கணித பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்றவள். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. தேவையில்லாமல் இந்த வழக்கில் சிறையில் இருந்து வருகிறேன். எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த மனுவை 14-ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமீன் கோரி ஆடி கார் ஐஸ்வர்யா மனுதாக்கல் செய்தார். ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் தள்ளுபடி செய்தது.