புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான தர்ணா போராட்டம் இரண்டாவது நாளாக இன்று நீடித்து வருகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் தலைகவச உத்தரவை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.


இதனிடையே மாநில அரசு செயல்படுத்த முடிவு செய்த 30 நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கிரண்பேடி மறுத்துள்ளதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி, நேற்று அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்த அவர், பிற்பகலில் ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு உடை அணிந்து போராட்டத்தை தொடங்கினார்.


நாராயணசாமியுடன் அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கருப்பு துண்டு அணிந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் மாளிகை வாயிலில் போராட்டம் நடைபெறுவதால் கிரண்பேடி நேற்று தமது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். 


புதுச்சேரி மக்களுக்கு நலம் தரும் 30 திட்டங்களுக்கு கிரண் பேடி ஒப்புதல் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று நாராயணசாமி தெரிவித்தார். நேற்று இரவு அங்கேயே படுத்து தூங்கிய அவர், இரண்டாவது நாளாக இன்று தர்ணாப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.


மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு ஆகியோர் அண்மையில் தர்ணாப் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது நாராயணசாமியும் தர்ணாவில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



இதனிடையே முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், புகார்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 7ஆம் தேதி தாங்கள் அனுப்பிய கடிதம் குறித்து பரிசீலிக்க போதிய அவகாசம் கூட கொடுக்காமல் அமைச்சரவை சகாக்களுடன் ஆளுநர் மாளிகை வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ளது சட்டவிரோதம் எனக் குறிப்பிட்டுள்ளார். கோரிக்கைகள் குறித்து நேரில் ஆலோசிக்க வரும் 21 ஆம் தேதி வருமாறு முதலமைச்சருக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.