விருதுநகர் அளித்த விருது: காமராஜரின் பிறந்தநாள் இன்று!!
1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரின் விருதாக, குமாரசுவாமி நாடார், சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு காமராஜர் மகனாகப் பிறந்தார்.
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
என்ற வள்ளுவன் வாக்கினிற்கேற்ப உலகில் பிறந்த மாமனிதர்களில் கர்மவீரர் காமராஜரும் ஒருவர். 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரின் (Virudhunagar) விருதாக, குமாரசுவாமி நாடார், சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த அவர் ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. துணிக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். தனது 16 அவது வயதில் காங்கிரஸ் கட்சியில் (Congress Party) சேர்ந்து ஆரசியல் பிரவேசம் செய்தார்.
துணிக்கடையில் பணிபுரிந்து வந்தாலும், பொது வாழ்க்கையிலும் மக்கள் சேவையிலும் எப்போதும் அவரது மனம் ஈடுபட்டது. ராஜாஜி, வரதராஜ நாயுடு போன்றவர்களின் பேச்சால் ஈர்க்கப்படு அரசியலிலும் சுதந்திர போராட்டங்களிலும் ஈடுபட ஆரம்பித்தார். வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு 1930-ல் முதன்முறையாக அவர் சிறை சென்றார். அதற்குப்பிறகு பல போராட்டங்களில் கலந்துகொண்ட்டார். பலமுறை சிறை சென்றார்.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்
சாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 1954 ஆம் ஆண்டு காமராஜர் (Kamarajar) தமிழக முதல்வரானார் (Chief Minister). தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நன்மதிப்பும் பேராதரவும் கிடைக்க மிக முக்கிய காரணமாக இருந்தவர் காமராஜர். முதல்வராக அவர் செய்த பணிகளும், அவர் கொண்டு வந்த நலத்திட்டங்களும் தொலைநோக்கு பார்வையுடன் செய்யப்பட்டவை என கூறினால் அது மிகையாகாது. படித்தால் தான் சில காரியங்களை செய்ய முடியும் என்ற எண்ணத்தை மாற்றி படித்தவரும் செய்யாத பல சாதனைகளை செய்துகாட்டிய படிக்காத மேதை காமராஜர்.
தான் படிக்காவிட்டாலும், வரும் தலைமுறைக்கு படிப்பில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். உயர்நவர் தாழ்ந்தவர் என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் கல்வி கற்க 30000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தொடக்கினார். பள்ளிகளை துவக்கியாகி விட்டது. இனி மாணவர்களை எவ்வாறு வரவழைப்பது என அவர் யோசித்த போது அவர் மனதில் உதித்த சிந்தனைதான் ‘இலவச மதிய உணவுத் திட்டம்’ (Free Midday Meal Scheme). கல்விக்காக இல்லாமல் போனாலும், வறுமையில் வாடும் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றால் ஒரு வேளை உணவு கிடைக்குமே என்ற எண்ணத்திலாவது பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என அவர் எண்ணினார். அந்த எண்ணம் நூறு சதவிகிதம் உண்மையானது. 7% ஆக இருந்த மாணவர்களின் வருகை 37% ஆனது. உடலுக்கு உணவளித்து வாழ்க்கைக்கு கல்வி அளித்து மாணவர்களுக்கும் வறுமைக்கும் இடையில் ஒரு சுவராக நின்றார்.
பலவித தொழிற்சாலைகளை நிறுவி வேலைவாய்ப்புகளை உண்டாக்கினார். கல்வி, வேலைவாய்ப்பு, மின்திட்டம், நீர் பாசனம், பொருளாதாரம் என பல துறைகளில் பலவித புதுமைகளை புகுத்தி நம் தமிழகத்தை முன்னோக்கி அழைத்துச் சென்றார்.
அரசியல்வாதிகளுக்கு இருக்கும் ஒரு முக்கிய குணம் இவரிடம் இல்லாமல் இருந்தது. ஆம்! காமராஜருக்கு பதவி ஆசை முற்றிலும் இருக்கவில்லை. கட்சியில் உள்ள முதியவர்கள் கட்சி இளைஞர்களுக்கு வழி விட்டு, பதவிகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல் தானும் அதற்கு ஒரு உதாரணமாக நடந்துகொண்டார். முதியவர்கள் கட்சிப்பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
அவரது வாழ்க்கை முறையும் எளிமையும் கட்சியிலும், வெளியிலும் அனைவரையும் அவரை மரியாதையுடன் காண வைத்தது. ஜவஹர்லால் நேரு மரணமடைந்தவுடன், லால் பகதூர் சாஸ்திரியை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். 1966 –ல் சாஸ்திரியின் திடீர் மரணத்திற்குப் பிறகு, நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்திய பிரதமராக்கினார்.
யாருக்கு எந்த பொறுப்பை அளித்தால், அந்த பணி சிறப்பாக நடக்கும் என கணிப்பதில் காமராஜரை மிஞ்ச ஆளில்லை என்றுதான் கூற வேண்டும். எந்த பதவிக்கு எப்படிப்பட்ட ஆளுமை தேவை என்பதை பார்த்து அவர் பொறுப்புகளை பிரித்துக் கொடுப்பதில் வல்லவர். சரியான சமயத்தில் நாட்டிற்கு சாதகமான சரியான தலைவர்களை தலைமைப் பொறுப்பில் அமர வைத்ததால், அவர் அனைவராலும் ‘கிங் மேக்கர்’ (King Maker) என பாராட்டப்பட்டார்.
அவர் தன் சொந்த வாழ்க்கையில் கடைபிடித்த எளிமை அனைவரையும் வியக்க வைத்தது. அவர் முதல்வரானவுடன் ஒரு முறை அவர் தாய், ‘நீ முதல்வராகிவிட்டதால், வீட்டிற்கு பலர் வந்து போகிறார்கள். அவைரகளுக்கு பழரசம் பலகாரம் என கொடுக்க பணம் தேவைப்படுகிறது. இந்த மாதத்தில் இருந்து பணம் கொஞ்சம் சேர்த்து அனுப்பு’ என கடிதம் எழுதினாராம். அதற்கு காமராஜர், ‘அம்மா, நான் முதல்வரானது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய. நம் வீட்டுக்கு வருபவர்களுக்கு பழரசம் வழங்க பணம் சம்பாதிக்க அல்ல. நான் அனுப்பும் பணத்தில் என்ன முடியுமோ அதை வருபவர்களுக்கு அளித்தால் போதும்’ என பதில் எழுதினாராம். இப்படியும் ஒரு அரசியல்வாதி இருந்தாரா? அதுவும் நம் தமிழகத்தில் இருந்தாரா? நம்புவது கடினமாகத் தான் உள்ளது.
காமராஜர் மேல் அனைவருக்கும் அளவு கடந்த பாசம் இருந்தது. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கமும் பலருக்கு இருந்தது. ஆனால் அதை அவரிடம் கேட்க யாருக்கும் துணிச்சல் இல்லை. ஒரு முறை இங்கிலாந்து ராணி இதைப் பற்றி காமராஜரிடம் கேட்டாராம். அதற்கு அந்த மாமனிதர்,’என் ஆட்சியில் இன்னும் பலர் திருமண வயதாகியும் திருமணம் நடக்காமல் உள்ளனர். பல சகோதரிகள், வறுமை காரணமாக திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்காமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வழி செய்யாமல் நான் மட்டும் எப்படி திருமணம் செய்து கொள்வது? எங்கள் சமூகத்தில் சகோதரிக்கு முதலில் திருமணம் செய்து வைப்பதுதான் வழக்கம்’ என்றாராம்.
நாட்டு மக்களை தன் குடும்ப உறுபினர்களாக எண்ணிய காமராஜர் பல ஏழைப் பெண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி, பல குடும்பங்கள் செழிக்க வழி செய்தார் என்பதை சொல்லத் தேவையில்லை. அதற்கு சரித்திரம் சான்று.
தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காகவும், அர்ப்பணித்த காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் இயற்கை எய்தினார். அடுத்த ஆண்டு, இந்திய அரசின் உயரிய விருதான பாரத் ரத்னா அவருக்கு அளிக்கப்பட்டது.
கர்ம வீரர் காமராஜரையும் அரசியல் சாத்தான் ஆட்டிப்பார்க்காமல் விடவில்லை. சில அரசியல் பெருச்சாளிகளுக்கு அவர் உறுத்தலாக இருந்தார். அரசியலில் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு காமராஜர் தடையாக இருந்தார். எதைப் பற்றியும் கவலைப் படாமல் தன் கடைமையை செய்தார் காமராஜர். இருப்பினும், பலர் அவரை பல சூழ்ச்சிகள் செய்து அகற்ற முயன்றனர். காமராஜரின் உதவியால் முன்னுக்கு வந்த சிலரும் இவை அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்தனர்.
காமராஜரின் மறைவிற்குப் பிறகு தமிழகமே, நாடே கலங்கி நின்றது. இவ்வளவு நல்ல மனிதர் போய்விட்டாரே என அவருக்காக பல இதயங்கள் துடித்தன. அவ்வேளையில், அரசியல் விமர்சகரும் திரைப்பட நடிகருமான சோ.ராமஸ்வாமி அவர்கள், தனது துகளக் இதழில், ‘காமராஜருக்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்ல. தன்னலம் பாராமல் உழைத்த மனிதர் பட்டது போதும் என போய்விட்டார். இனி யாராலும் அவரை அவமதிக்கவோ வேதனைப்படுத்தவோ முடியாது. இனி நமக்காகத் தான் நாம் வருத்தப்பட வேண்டும். நமக்கு தான் நாம் அனுதாபங்களை சொல்லிக்கொள்ள வேண்டும். நிழல் தந்த ஆலமரம் வீழ்ந்து விட்டது. இனி நேரடி வெயில் நமக்குத்தான் காத்திருக்கிறது‘ என எழுதியிருந்ததை யாராலும் மறக்க முடியாது.
ALSO READ: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள் இன்று வெளியீடு, மதிப்பெண்களை சரிபார்ப்பது எப்படி
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தபோதும், இறுதிவரை அவர் வாடகை வீட்டிலேயே இருந்தார். அவர் தனக்காக சேர்த்த சொத்து, சில கதர் வேட்டிகள், சட்டைகள் மற்றும் புத்தகங்கள். இப்படிப்பட்ட மாமனிதரை இனி சரித்திரம் காணுமா?
காமராஜர் பொற்கால ஆட்சி தந்த பொக்கிஷம், இலவச மதிய உணவளித்த அட்சய பாத்திரம், இலவச கல்வி அளித்த படிக்காத மேதை, தன்னலம் கருதா அரசியல் ஆச்சரியம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்த கர்ம வீரர்…. அவர் புகழ் இந்த உலகுள்ளவரை நீங்காமல் இருக்கும் என்பது திண்ணம்!!