நயினார் நாகேந்திரன் பணம் 4 கோடி ரூபாய் தாம்பரத்தில் சிக்கியது எப்படி? லீக்கான ரகசிய தகவல்
Nainar Nagendran: தாம்பரம் ரெயில் நிலையத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 3 கோடியே 99 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தலில் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்டபோது பிடிப்பட்டது.
லோக்சபா தேர்தல்:
நாடு முழவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சிகளுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தினம்தோறும் பொதுக்கூட்டம், தெருமுனை பிரச்சாரம் செய்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்-முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!
நெல்லையில் நயினார் நாகேந்திரன்போட்டி
நெல்லை தொகுதியில் இம்முறை பாஜக நேரடியாக களம் கண்டுள்ளது. அந்த தொகுதியில் தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் பாஜகவின் நயினார் நாகேந்திரன் எம்பி தேர்தலிலும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ், அதிமுகவில் ஜான்சி ராணி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் பெரிதும் உற்றுநோக்கப்படக்கூடிய தொகுதியாக திருநெல்வேலி மாறியிருக்கிறது.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
பிரச்சாரம் முடிவடைய ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் மாநில முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, அந்த தொகுதியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த சூழலில் தான் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு கொண்டு செல்ல ரயில் மூலம் பணம் எடுத்துச் செல்லப்பட்டபோது பறக்கும் படையினர் பிடித்துள்ளனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கியது எப்படி?
தாம்பரம் ரெயில்நிலையத்தில் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதன்படி தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையிட்டனர். அப்போது எஸ்.7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் கட்டுகட்டாக பெட்டிகளில் மறைத்து பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று நபர்களை கைது செய்து போலீசார், தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம்
அப்போது அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் பணத்தை எடுத்து வந்த சதீஷ் (வயது 33) நவீன் (வயது 31) பெருமாள் (வயது 25) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜன் முன்னிலையில் போலீசார் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க | கோவையில் ஐடி ரெய்டு... மருத்துவமனை ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம் - பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ