மாநிலங்களவையில் இடம் கேட்கும் பாஜக? யாருக்கு கொடுப்பது? குழப்பத்தில் அதிமுக!!
இரண்டு இடங்களை விட்டுக்கொடுத்து விட்டால், கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு எப்படி பதவி வழங்குவதும் என்ற குழப்பத்தில் அதிமுக மேலிடம்.
புது டெல்லி: 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி மோடி அமைச்சரவை பதவியேற்க்க உள்ளார். அமைச்சரவையில் யாருக்கு எல்லாம் இடம் கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
542 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக. இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தை பொருத்த வரை திமுக அலை தான் வீசியது என்று தான் கூற வேண்டும்.
தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலத்தில் 39 தொகுதிக்கு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் 38 இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி வெறும் ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிலும் பாஜக தான் போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.
தற்போது பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் என்பதால், அவரை எப்படியாவது அமைச்சராக்கி விட வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல முயற்ச்சிகளை எடுத்து வருகிறார். தமிழகத்திலிருந்து அவர் அமைச்சராக தேர்ந்தேடுக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே நேரத்தில் வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது. அதில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும். அந்த பதவியில் யாரை அமர்த்துவது என்று திமுக ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஆனால் அதிமுகவுக்கு கிடைக்க உள்ள மூன்று மாநிலங்களவைகளில் ஒரு இடத்தை பாஜகவுக்கு தரும்படி பாஜக மேலிடம் அதிமுகவிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக டெல்லி வந்த முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் பாஜக பேசியதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக - பாமக தேர்தல் கூட்டணி உடன்பாடு செய்த போது ஒரு மாநிலங்களவை பாமகவுக்கு வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்டு உள்ளது. இப்பொழுது பாஜகவும் ஒரு இடம் கேட்கிறது. இரண்டு இடங்களை விட்டுக்கொடுத்து விட்டால், கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு எப்படி பதவி வழங்குவதும் என்றும், மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் குறையுமே என்ற அச்சத்திலும் அதிமுக உள்ளது.
இதுக்குறித்து முடிவு எடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அநேகமாக இன்னும் இரண்டு நாளில் இதுக்குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.