பேரறிஞர் அண்ணா 111 ஆவது பிறந்தநாள் விழா செப்டம்பர் 15 அன்று சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. தமிழ்ப் பெருமக்களே அணிதிரண்டு வாரீர் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து தனது அறிக்கையில் கூறியதாவது: 


பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, வழக்கம்போல் மிக எழுச்சியாக சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 15 அன்று நடைபெறுகிறது. தமிழக அரசியலிலும், இந்திய அரசியல் அரங்கிலும் மிக முக்கியமான காலகட்டத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்றி வைத்த அணையாச் சுடர், மாநில சுயாட்சி தத்துவத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.


ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு; ஒரே தேர்தல்; ஒரே குடும்ப அட்டை; ஒரே கல்வி; ஒரே சுகாதாரக் கொள்கை; ஒரே வரிவிதிப்பு என்று அனைத்தையும் ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்து, எதேச்சாதிகார ஆட்சி நடத்த மதவாத சனாதன சக்திகள் ஆட்சி அதிகாரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தத் தொடங்கி உள்ளன.


அரசியல் அமைப்புச் சட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு, கூட்டாட்சிக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் பா.ஜ.க. அரசு தீவிரமாக இயங்கி வருகிறது.


வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் இந்தியா ஒரே நாடாக இருந்தது இல்லை என்பதும், ஆங்கிலேயர் ஆட்சிதான் பீரங்கிகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும் பயன்படுத்தி இந்தியா என்ற வரைபடத்தை உருவாக்கியது என்பதுதான் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேருண்மையாகும். இதைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களால் இணைக்கப்பட்ட துணைக் கண்டம் என்று தெளிவுபடக் கூறினார்.


தேசிய இனங்களின் அடையாளங்களையும், இன, மொழி, பண்பாட்டு உரிமைகளையும் பாதுகாப்பதின் மூலம்தான் வேற்றுமையில் ஒற்றுமை நிலவ முடியும். தேசிய ஒருமைப்பாடு என்பது நிலைக்கும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.


இந்தியாவை ஒற்றை ஆட்சிக்குத் தள்ளும் எதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் ஈட்டி முனையாக திராவிட முன்னேற்றக் கழகம் திகழும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா காட்டிய இலட்சியப் பாதையில் பயணிக்கிறது.


நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலம் பெற்றுவிட்ட காரணத்தினாலேயே பல்வேறு தேசிய இனங்களின் கலாச்சார அடையாளத்தை அழித்து, பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறித்து அடக்கி ஆள நினைக்கின்ற மதவாத சனாதனக் கூட்டத்தின் முயற்சிகளை முறியடிக்க இந்திய அரசியலில் மாநிலக் கட்சிகள் பலம்பெற வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.


தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பலிகொடுத்து, நாசப்படுத்தி வரும் அ.இ.அ.தி.மு.க. அரசைத் தூக்கி எறிய வேண்டும்.


அந்தக் கடமையை நிறைவேற்ற களம் அமைக்க வேண்டியது அண்ணா வழியில் நடைபோடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பணியாகும். அதற்கு கட்டியம் கூறத்தக்க வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆருயிர் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.


காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் எனது இனிய நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்கள் பங்கேற்கிறார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு யஷ்வந்த் சின்கா அவர்களும், திரிணமுல் காங்கிரசின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் திரு தினேஷ் திரிவேதி அவர்களும் சிறப்புரை ஆற்றுகிறார்கள். திராவிடர் கழகத் தலைவர் ஆருயிர் அண்ணன் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டின் நண்பகல் அமர்வில் நிறைவுரை ஆற்றுகிறார்கள்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில், மற்றொரு மைல் கல்லாக அமையப்போகிற இந்த மாநாட்டிற்கு கழகக் கண்மணிகள் அலை அலையாக அணிதிரண்டு வாருங்கள். தமிழ் பெருமக்களே வருங்காலத் தமிழகத்தை வார்ப்பிக்கப் போகிற இளைஞர்களே, மாணவர்களே மாநாட்டுக்கு வாரீர்! வாரீர்! என்று அன்புடன் அழைக்கின்றேன்.


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.