புது டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் மாணவர்கள் மூலம் தொடங்கிய போராட்டம், தற்போது மக்கள் போராட்டமாக மாறி உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து மக்கள் மட்டுமில்லை, அரசியல் கட்சிகளும் ஆரம்ப முதலே, இந்த CAA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தலைநகரம் தில்லி உட்பட ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கர்நாடாக மாநிலத்தின் இன்று பெருமளவில் போராட்டம் நடைபெற உள்ளது என காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. ஆனால் தடை உத்தரவை மீறி பெங்களூரு டவுன்ஹால் பகுதியில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கலந்துக்கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கு வந்த காவல் துறையினர் அமைதியாக போராட்டம் நடத்திய உலக புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை பார்த்த பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தலை சிறந்த வரலாற்று ஆசிரியரை தள்ளி இழுத்து வலுக்கட்டாயமாக கைது பட்டிருப்பது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. 


உலக புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளம் மூலம் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.