மு.க.ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு
மெரினாவில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 63 எம்எல்ஏக்கள், 3 எம்.பி.க்கள் உள்பட 2 ஆயிரம் திமுகவினர் மீது மெரீனா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். இதனால் திமுக-வினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அடுத்தடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் திமுக-வினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் மு.க. ஸ்டாலினும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இதனால் திமுகவினர் மாவட்டந்தோறும் சாலை மறியல், சபாநாயகர் உருவபொம்பை எரித்தல் உள்ளிட்ட போராட்டங்களில் இறங்கினார்கள். மெரினாவில் ஸ்டாலினுக்கு ஆதரவாக கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. அனுமதி பெறாமல் மெரினாவில் போராட்டம் நடத்தியதாக மு.க. ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 63 எம்எல்ஏக்கள், 3 எம்பிக்கள் மற்றும் 2 ஆயிரம் திமுக தொண்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.