மராட்டியம், ஒதிஷா மாநிலங்களைப் பின்பற்றி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டு என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு  கோரிக்கை விடுத்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குய்ர்ப்பிட்டுள்ளதாவது... இந்தியாவில் 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான அகிலேஷ் சிங் யாதவ் கூறியிருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியால் எழுப்பப்பட்ட இக்கோரிக்கைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது; இது வரவேற்கத்தக்கது.


சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவில் முழுமையான சமூகநீதியை உறுதி செய்ய முடியாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கடந்த ஜூலை மாதமே பா.ம.க. வலியுறுத்தியிருந்தது.


அதைத்தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி மராட்டிய சட்டப்பேரவையிலும், 11-ஆம் தேதி ஒதிஷா அமைச்சரவைக் கூட்டத்திலும் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஹரியானா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கோரிக்கை எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் பா.ம.க.வின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அகிலேஷ்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.


இன்றைய சூழலில் இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வது தவிர்க்க  முடியாதது ஆகும். பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எழுப்பும் கோரிக்கைகள் ஒருபுறமிருக்க, இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள புதிய நிலைப்பாட்டின்படியே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியமாகும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்க நீதிபதி ரோகிணி ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. குறிப்பிட்ட சாதிகள் அடங்கிய  ஒவ்வொரு தொகுப்புக்குமான இடஒதுக்கீட்டின் அளவை  தீர்மானிக்க  சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகும்.


2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பே சாதிவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென  பா.ம.க. வலியுறுத்தியது. இதற்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிய அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அது தொடர்பான மனுவை 2008-ஆம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் நேரில் வழங்கினார். பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் எதற்கும் உதவாத சடங்கு ஒன்றை அப்போதைய மத்திய அரசு நடத்தி  மக்களை ஏமாற்றியது. அப்போது இழைக்கப்பட்ட துரோகத்திற்கு பரிகாரம் செய்யும் வகையில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.


2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று 2018&ஆம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். அத்தகைய கணக்கெடுப்புக்கும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கணக்கெடுப்பு ஆவணத்தில் பிற பிற்படுத்தப்பட்டவர் என்று குறிப்பிடும் பகுதியில்  அவரது சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டால் போதுமானது. இந்தியாவில் பின்தங்கிய மக்களை முன்னேற்ற இட ஒதுக்கீடு தான் சிறந்த ஆயுதம் எனும் சூழலில், அந்த ஆயுதத்தை செம்மையாக பயன்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவர தொகுப்பை உருவாக்குவது அவசியமாகும்.


எனவே, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும். மராட்டியம், ஒதிஷா மாநிலங்களைப் பின்பற்றி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.