ஆர்கேநகர் இடைத்தேர்தலை ரத்து செயததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்கேநகரில் ஏப்ரல் 12-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது.


இந்த தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.


இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, டெல்லியில் நடந்த ஆலோசனைக்கு பிறகு ஆர்கேநகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த நிலையில், பணம் கொடுக்கும் பட்டியலில் உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-


ஜனநாயக முறைப்படி நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமென்றால் இடைத் தேர்தலின் போது பண விநியோகத்திற்கும், தேர்தல் முறைகேடுகளுக்கும், தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலைக்கும் காரணமாக இருந்த அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


தேர்தல் பார்வையாளர்கள், சிறப்பு பார்வையாளர்கள், இவ்வளவு பறக்கும் படைகள் இருந்தும் பண விநியோகம் தங்கு தடையின்றி நடந்தது எப்படி என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி அதற்கு துணை போனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எல்லாவற்றிற்கும் மேலாக வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ள “வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலில்” இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், முதல்-அமைச்சர் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையமே நடவடிக்கை மேற்கொண்டு, இனி எந்தக் காலத்திலும் தமிழக இடைத்தேர்தலில் மட்டுமல்ல- பொதுத் தேர்தல்களிலும் தேர்தல் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையே எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.