கொரோனா ஒழிப்பு: தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்- PMK
கொரோனா ஒழிப்புகக்கு தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மிகவும் சிக்கலானவையாக மாறியுள்ள நிலையில், அதற்குத் தேவையான நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு இதுவரை ஒதுக்கீடு செய்யாதது மிகவும் வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் சம பங்கு இருக்கும் நிலையில், அதை மத்திய அரசு தட்டிக்கழித்து விடக் கூடாது.
தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 62,087 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 34,112 பேர் குணமடைந்துள்ளனர். 27,178 பேர் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 42,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட போது அடுத்த ஒரு சில வாரங்களில் கொரோனா வைரஸ் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடையும் நிலையில், எப்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பதையே கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் போது அதைக் கட்டுப்படுத்த புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான அரசின் செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
கொரோனா வைரஸ் நோய்ப்பரவலைக் கட்டுப்பாடுத்துவதற்காக முதன் முதலில் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட போது, மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக ரூ.3,000 கோடி, கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக ரூ.9000 கோடி சிறப்பு நிதி, மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க ரூ.4,000 கோடி என மொத்தம் 16,000 கோடி வழங்கும்படி மத்திய அரசை தமிழக அரசு கோரியிருந்தது. அத்துடன், உணவு தானியங்கள் கொள்முதல் செய்ததற்கான மானிய நிலுவை ரூ.1321 கோடி மற்றும் வரி வருவாய் நிலுவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, நிதிப்பற்றாக்குறை மானியம் உள்ளிட்ட சில தலைப்புகளில் மத்திய அரசு உதவிகளை வழங்கினாலும் கூட, தமிழக அரசு கோரிய நிதி உதவிகள் இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த 17-ஆம் தேதி பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது கூட, தமிழகத்தில் கொரோனாநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நிதி உதவிகளை வழங்கும்படி தமிழக முதலமைச்சர் மீண்டும் கோரியுள்ளார்.
READ | தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை சமாளிக்க, கடந்த சில வாரங்களில் மட்டும் 530 மருத்துவர்கள், 2570 செவிலியர்கள், 1508 ஆய்வக தொழில்நுட்பர்கள், 334 சுகாதார ஆய்வாளர்கள், 2715 சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் தவிர, 2221 முதுநிலை மருத்துவர்கள், 2323 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஓய்வு பெறவிருந்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கும் தற்காலிகமாக பணி நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது. இதனால் தமிழக அரசின் மருத்துவம் சார்ந்த செலவுகள் அதிகரித்துள்ளன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்காகவும் பெரும் தொகையை தமிழக அரசு செலவிட்டு வருகிறது.
அதேநேரத்தில் தமிழக அரசின் வருவாய் மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. ஊதியம் உள்ளிட்ட தேவைகளுக்காக கடன் வாங்க வேண்டியுள்ள நிலையில், கொரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் மாநில அரசுகளுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க வேண்டியது மத்திய அரசின் கட¬மையாகும். கொரோனா வைரஸ் நோய் தொடர்பான ஒவ்வொரு கட்ட ஆலோசனையின் போதும் மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் உறுதியளித்து வருகிறார்.
எனவே, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஏற்கனவே கோரியிருந்த ரூ.12,000 கோடி, உணவு தானியங்கள் கொள்முதல் செய்ததற்கான மானிய நிலுவைத் தொகை ரூ.1,321 கோடி ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன் தமிழக அரசு கோரிய கடனுதவிகள், மானிய முன்பணம், வரி வருவாயில் பங்கு, கூடுதல் உணவு தானியங்கள் ஆகியவற்றையும் விரைந்து வழங்கி, கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றார்.