காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கோரி கர்நாடகா அரசு அளித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசின் சம்மதம் இல்லாமல் அணை கட்ட முடியாது எனவும் கர்நாடகா அரசை எச்சரித்துள்ளது.  தனது மாநில எல்லைக்குள் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து, புதிய அணை அமையும் இடம், அதற்கான திட்ட மதிப்பீடு, பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத் துறையிடம் கர்நாடகா அரசு சமர்ப்பித்தது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு நான்கு மாதங்களுக்கு முன் நீர்வளத் துறைஅனுமதி வழங்கியது. 


இந்நிலையில், மேகதாது பகுதியில் அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள இந்த ஒப்புதலை எதிர்த்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இருப்பினும், கடந்த ஜூன் 20-ஆம் தேதி கர்நாடகா நீர்வளத் துறை அமைச்சகத்தில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு வரைபடத்துடன் கூடிய புதிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. 


இந்த கடிதத்தில் ‘கர்நாடகாவில் 6 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை உள்ளது. இதில் காவிரியில் இருந்து வரும் நீரை குடிநீருக்காக மட்டும் ஒரு கோடியே 80 லட்சம் மக்களுக்கு மேல் பயன்படுத்தி வருகிறனர். மற்றவை தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.  மேகதாதுவில் புதியதாக அணை கட்டினால்,  பல டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதன் மூலம், தமிழகத்திற்கும் போதுமான குடிநீரையும் வழங்க முடியும்,’ என கூறப்பட்டது. 
எனினும் இதற்கும் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்கும்படி, பிரதமர் மோடி, மத்திய நீர்வள அமைச்சர் போன்றவர்களிடம் தமிழக தலைவர்கள் வலியுறுத்தினர். 


இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில்  இருந்து கர்நாடகாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தில்., ‘காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான மாற்று இடங்கள் குறித்து பரிசீலிக்காமல், மேகதாது என்ற ஒரே இடத்தில் இரு வேறு உயரத்தில் அணைகள் கட்டுவது குறித்து ஆய்வை ஏன் மேற்கொண்டு வருகிறீர்கள்? இதில் அணை கட்டுவதற்காக சுமார் 4 ஆயிரத்து 996 ஹெக்டேர் பரப்பளவில் காவிரி வன உயிர் சரணாலயம் மற்றும் காப்புக்காடு பகுதிகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக வேறு நிலங்களை தேர்வு செய்ய வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது. 


இதைத் தவிர அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை எவ்வளவு என்பது குறித்த எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. இதில் முக்கியமாக சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு இந்த திட்டத்திற்கான ஆய்வு எல்லைகளை வழங்கக் கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களிடையே சுமூக உடன்பாடு எட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம். இல்லை எனும் பட்சத்தில் அணை கட்டுவது என்பது சாத்தியம் கிடையாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், காவிரியின் குறுக்கே மேகதாவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.