இஸ்ரோவுக்கு இது தோல்வியல்ல: விலைமதிப்பற்ற கற்றல் தருணம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

978 கோடி ரூபாய் செலவில் தயாரான சந்திரயான்-2, 3,850 கிலோ எடை கொண்டதாகும். நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் லேண்டர் விக்ரம் மற்றும் ஆய்வூர்தி பிரக்யான் ஆகிய 3 அங்கங்களை உள்ளடக்கியது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி, பிற்பகல் 2.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 


பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, அதன் சுற்றுப்பாதை நிலவுக்கு நெருக்கமாக அமையும் வகையில் படிப்படியாக குறைக்கப்பட்டது. செப்டம்பர் 2 ஆம் தேதி பகல் 12.45 மணியில் இருந்து 1.45 மணிக்குள் சந்திராயன் 2 ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாக, ஆய்வூர்தி பிரக்யானுடன் லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.


திட்டமிட்டபடி செப்டம்பர் 2 ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவை நோக்கி நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது. நிலவில் இருந்து அதிகபட்சம் 128 கிலோமீட்டர், குறைந்தபட்சம் 114 கிலோமீட்டர் தொலைவு என்ற சுற்றுப்பாதையில் லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்டது. இதன் பிறகு, பிரக்யானுடன் கூடிய லேண்டர் விக்ரமின் சுற்றுப்பாதை, அதிகபட்சம் 100 கிலோமீட்டர், குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் என மாற்றப்பட்டு சுற்றியது.


இந்நிலையில், இன்று அதிகாலை 1.40 மணிக்கு, 30 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தபோது, லேண்டர் விக்ரம் சுற்றுவது நிறுத்தப்பட்டு, நிலவை நோக்கி தரையிறக்கும் பணி தொடங்கியது. இதை விஞ்ஞானிகளுடன் காண்பதற்காக, பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடியும் வந்திருந்தார். படிப்படியாக திட்டமிட்டபடி வெற்றிகரமாக லேண்டர் விக்ரம் இறங்கிய நிலையில், அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


சந்திராயன்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலவின் அருகில் சென்றபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "இது தோல்விக்கு சமமானதல்ல, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு கற்றல் வளைவு இருக்கும். இது அந்த விலைமதிப்பற்ற கற்றல் தருணம். நாம் விரைவில் சந்திரனில் இருப்போம். இஸ்ரோவை நாடு நம்புகிறது. பாராட்டுகிறது." என அதில் தெரிவித்துள்ளார்.