சென்னையில் திடீரென பேருந்துகள் நிறுத்தம்..! போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
போக்குவரத்து துறை தனியார் மயத்தைக் கண்டித்து சென்னையில் அரசுப் பேருந்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னையில் இன்று மாலையில் திடீரென அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு செல்லத் தொடங்கினர். பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் பயணிகளை இறங்கிவிட்டு, அவர்களிடம் பஸ் போகாது என்று கூறிவிட்டனர். பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் டிரைவர், கண்டக்டர்கள் பேருந்துகளை நிறுத்தியதால், ஏராளமான பயணிகள் நடுவழியில் தவிக்கின்றனர்.
போக்குரவத்து ஊழியர்களின் கோரிக்கை
இதனால், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அரசுப் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்குதலை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை வில்லிவாக்கத்தில் அரசு போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்தினார்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
இது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மருத்துவர் ராமதாஸ், இது குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
1. சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், சில பணிமனைகளில் இருந்து குறைந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன; பல பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. திடீர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. வாரத்தின் முதல் பணிநாளான இன்று வேலைக்கு வந்த பணியாளர்கள், குறிப்பாக பெண்கள் பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். சென்னை வடபழனி, ஆலந்தூர், கிண்டி, நுங்கம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பல இடங்களில் பேருந்துகள் கிடைக்காமல் கூட்டம், கூட்டமாக நிற்கின்றனர். புறநகர் தொடர்வண்டிகளிலும், பெருநகரத் தொடர்வண்டிகளிலும் சமாளிக்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. பொதுமக்களின் இந்த அவதி போக்கப்பட வேண்டும்.
3. சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 30 பணிமனைகளில் பத்து பணிமனைகளில் தனியார் மூலம் ஓட்டுனர்கள் குத்தகை முறையில் நியமிக்கப்பட்டிருப்பது தான் மாநகரப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போராட்டத்திற்கு காரணம் ஆகும். குத்தகை குறையில் தனியார் ஓட்டுனர்கள் அமர்த்தப்படுவதற்கு பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதை மதித்து, அந்த முடிவை நிர்வாகம் கைவிட்டிருந்தால் இந்த திடீர் வேலைநிறுத்தம் ஏற்பட்டிருக்காது.
4. தனியார் மூலம் ஓட்டுனர்களை நியமிக்கும் முறை கைவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திடீர் போராட்டத்தை கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழக நிர்வாகமும், பணியாளர்களும் பேச்சு நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | கரூர்: வருமானவரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக சோதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ