பணிமாறுதலை உரிமையாக கோர முடியாது - செ. உயர்நீதிமன்றம் அறிவுரை

பணி மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த தலைமை ஆசிரியர். சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன அறிவுரை என்ன ?
அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு சொந்த ஊரில் போஸ்டிங் கிடைப்பது என்பது பெரும் மகிழ்ச்சியான விஷயம்தானே. பணி மாறுதலுக்கான கோரிக்கையை தமிழக அரசின் அந்தந்தத் துறை சார்ந்த அலுவலர்களிடம் பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் வழக்கம். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் பணி மாறுதலுக்காக நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதற்கு நீதிமன்றம் பல்வேறு சட்ட ரீதியிலான அறிவுரைகளைக் கூறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள கேசவ ராஜபுரம் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார் ஜமுனா ராணி. இவர், திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணி காலியாக இருப்பதாகவும், அந்தப் பதவிக்கு தன்னை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்தார். அந்தப் பதவிக்காக மே மாதம் 31ம் தேதி நடைபெற உள்ள கலந்தாய்வுக்கு தன்னை அழைக்கும்படி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடுமாறும் ஜமுனா ராணி கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் ஏதும் தற்போதைக்கு காலியாக இல்லை என்றும், அதனால்தான் மனுதாரரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியிட மாற்றம் மற்றும் பணிநியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தெளிவுப்படுத்தினார். மேலும், நிர்வாக வசதிக்காக கலந்தாய்வு போன்ற சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இந்த சலுகைகளை உரிமையாக கோர முடியாது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பணியிட மாறுதல் விவகாரங்களில் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR