வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு 8.11.2018 காலை 10.00 மணிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்கள்.


தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 8-ஆம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.


இத்தாலியில் உள்ள காஸ்டிகிளியோன் என்ற ஊரில் கண்டல்போ பெஸ்கி- எலிசபெத் என்ற தம்பதியருக்கு மகனாக கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) 1680-ஆம் ஆண்டு பிறந்தார். 1698-ல் பெஸ்கி இயேசு சபையில் சேர்ந்தார். இவர் லத்தீன், பிரெஞ்சு, கிரீக் மொழிகளை கற்றுத் தேர்ந்து அதில் நல்ல புலமை பெற்றார். இவர் தர்க்க, வேதசாஸ்த்திரங்களை கற்றுத் தேர்ந்த பின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 


1710இல் பெஸ்கி தனது தலைமையிடம் வேண்டியபடி, லிஸ்பனுக்கு வந்தார். அங்கிருந்து கப்பல் ஏறி கோவா வந்து சேர்ந்தார். பெஸ்கி கோவாவிலிருந்து அம்பலக்காடு யேசு சபைக் குருமடம் வந்தார். அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி வழியாக, மதுரை மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பட்டியை அடைந்தார். இங்கு எண்ணற்ற மக்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினார். 1713-ல் இங்கிருந்து தஞ்சைப் பகுதிக்குச் சென்ற பெஸ்கி அங்கிருந்து திருநெல்வேலிக்குச் சென்றார். வடக்கன்குளம், கயத்தாறு பகுதியில் ஞானப்பணி ஆற்றி வந்த பெஸ்கி தமிழை பிழையறக் கற்றார். இங்கு இருந்துகொண்டே இலக்கிய, இலக்கண நூல்களை எழுதத் தொடங்கினார். இவரின் பணிகளை வியந்து, மக்கள் வீரமாமுனிவர் என்று அவரை அழைத்தனர்.


மேலை நாட்டில் பிறந்து தமிழகத்தில் பணியாற்றிய இறையடியார்கள் பலருண்டு. அவர்களில் சமயப்பணியும், சமூகப்பணியும் மட்டுமின்றி தமிழ்ப்பணியும் ஆற்றிய தனிச் சிறப்புக்குரியவர் வீரமாமுனிவர். அருந்தமிழ்ச் செல்வரான வீரமாமுனிவர் 1747-ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் நாள் இயற்கை எய்தினார். 


தமிழக அரசின் சார்பில், வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு 8.11.2018 அன்று காலை 10.00 மணியளவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்!