CM Stalin Delta Visit: மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம்? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில்
CM Stalin On Electric Bill Hike: மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது கையெழுத்திட்டது தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் தெரிவித்துள்ளார்.
CM Stalin On Electric Bill Hike: டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வரும் ஜூன் 12ஆம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அங்கு நடைபெறும் தூர்வாரும் பணிகளை அவர் பார்வையிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி லால்குடி அருகே உள்ள பூழையாற்றில் ரூ. 23.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, திருச்சி புள்ளம்பாடி அருகே உள்ள இருதயபுரம் வழியாக பாயும் நந்தியாற்றில் ரூ. 1.94 கோடி மதிப்பீடில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார். அங்கு ஏறத்தாழ பணிகள் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில்,"வேளாண்மைத்துறைக்கு தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. மைக்கேல் பட்டியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் தமிழ்நாடு அரசு அதை எதிர்த்தது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை அடுத்து நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டது. காவிரி பாசன பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வார அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
மேலும் படிக்க | மின் கட்டணம் உயர்வு, ஆனால்... மின்சார வாரியம் விளக்கம்!
கடந்தாண்டு 4.9 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி, 13.7 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. அணை திறப்புக்கு முன்னரே 4,964 கி.மீ. கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நீர்வளத்துறை மூலம் ரூ. 90 கோடியில் கால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, 2022-23இல் 5.36 லட்சம் ஏக்கர் பரப்பில் குருவை சாகுபடி, 13.53 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்ற ஒரு சாதனையை இவ்வாண்டும் நிகழ்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
96 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய பணிகள் அடுத்த சில நாட்களில் முடிவடைந்துவிடும். எந்த காரணத்தை கொண்டும் மேகதாது அணை கட்ட அனுமதிக்கமாட்டோம். இவ்வாண்டு குறுவைத் தொகுப்பு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். அதுமட்டுமின்றி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் வருமா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்," தற்போதைய சூழலில் ஒன்றிய அமைச்சரவையில்தான் மாற்றம் வருவது போல் உள்ளது. வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை. மின்கட்டண உயர்வுக்கு அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது தான் காரணம். கைத்தறி, விசைத்தறிக்கு அளிக்கப்படும் மின்சார சலுகைகள் தொடரும். வரும் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ