இந்த விளக்கம் போதுமா?...ஆளுநர் பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்
ஆளுநரை வைத்து அரசியல் செய்யலாம் என்ற எதிர்க்கட்சிகளின் எண்ணம் நிறைவேறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டலின் சட்டசபையில் கூறியுள்ளார்.
ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. அப்போது ஆளுநருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து விளக்கமளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி அரசிடம் கேள்வியைக் கேட்கின்றபோது அதற்குரிய பதிலை பொறுமையாக இருந்து கேட்டு அதிலே உடன்பாடு இல்லை என்று சொன்னால் வெளிநடப்பு செய்வதே மரபு எனக் குறிப்பிட்டார்.
ஆளுநர் தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க திருக்கடையூர் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றிருக்கக்கூடிய போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்பதை காவல் துறை கூடுதல் இயக்குநர் மிகத் தெளிவாக, மிக விளக்கமாக கூறியிருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும் படிக்க | தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; மயிலாடுதுறையில் பரபரப்பு
மேலும், ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் காவல்துறையால் பாதுகாக்கப்பட்டதாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியே கூறியிருப்பதாகவும், எனவே இதையே வாய்ப்பாக பயன்படுத்தி, இதை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் நினைப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். பொதுவாக சேர்ந்தே அறிக்கை வெளியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இந்த விவகாரத்தில் தனித்தனியே அறிக்கை வெளியிட்டிருப்பதைக் கொண்டே நாம் புரிந்துகொள்ள முடியும் எனக் கூறிய ஸ்டாலின், ‘தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காவல் துறையைத் தனது கையில் வைத்திருக்கக்கூடிய முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்’ என சொல்லிவிட்டு, எதிர்க்கட்சித்தலைவர் தனது பதிலைக் கேட்காமலேயே போய்விட்டது வருத்தமளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அங்கே போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், ஆளுநர் பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது எனவும் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினார். இந்த நிகழ்வை அரசியல் செய்யலாம் என நினைத்தால் அது நடக்கவே நடக்காது எனக் கூறிய ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தெரியவில்லை எனக் கூறியவர் இன்று சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருப்பதாகவும் முக ஸ்டாலின் விமர்சித்தார்.
அதிமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த மறைந்த சென்னா ரெட்டிக்கு என்ன நடந்தது? எனக்கேள்வி எழுப்பிய அவர், திண்டிவனத்தில் 10-4-1995 அன்று, ஆளுநர் சென்னா ரெட்டியும், அவரது கான்வாயும் 15 நிமிடங்களுக்கு மேல் அங்கே மறிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் நடுரோட்டில் நின்றது யாருடைய ஆட்சியில்? முட்டை, தக்காளி வீசி அவமானப்படுத்தப்பட்டது யார் ஆட்சியில் எனக் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் மட்டுமல்ல, மிகப் பெரிய சட்டப் பதவியில் இருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் மறைந்த டி.என். சேஷன் தங்கியிருந்த தாஜ் கோரமண்டல் ஓட்டலையும் முற்றுகையிட்டு கல்வீசித் தாக்குதல் நடத்தியது யாருடைய ஆட்சியில்? எனவும் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பா.ஜ.க வின் முக்கியஸ்தராகிய சுப்ரமணிய சாமியை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கி அசிங்கப்படுத்தியது யார் ஆட்சியில், பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசியது யார் ஆட்சியில் என அடுக்கடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இந்த விளக்கமே போதும் எனக் கருதுவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் படிக்க | சென்னா ரெட்டி, சந்திரலேகா...சட்டசபையில் ஸ்டாலின் கூறிய Flashback
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR