சென்னா ரெட்டி, சந்திரலேகா...சட்டசபையில் ஸ்டாலின் கூறிய Flashback

மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு, கடந்த கால நிகழ்வுகள் சிலவற்றை குறிப்பிட்டு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 20, 2022, 09:00 PM IST
  • அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்
  • சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்
  • ஸ்டாலின் கூறியவற்றின் பின்னணி
சென்னா ரெட்டி, சந்திரலேகா...சட்டசபையில் ஸ்டாலின் கூறிய Flashback title=

மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு, கடந்த கால நிகழ்வுகள் சிலவற்றை குறிப்பிட்டு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். இந்த விளக்கத்தில் தமிழக முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, பெண் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா ஆகியோரைக் குறிப்பிட்டார். இந்த பெயர்களும், அதற்குப் பின்னால் உள்ள நிகழ்வுகளும் அன்றைய அரசியல் நிகழ்வுகளை நன்கு அறிந்தவர்களுக்கு பரிட்சயமானவை.

ஸ்டாலின் குறிப்பிட்ட நிகழ்வுகள் நடைபெற்று சுமார் 30 ஆண்டுகள் ஆகின்றன. சென்னா ரெட்டியின் பெயர் இப்போது மட்டுமின்றி ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தபோதே விவாதிக்கப்பட்டது. கடந்த 1994, 1995-ம் ஆண்டுகளில் தமிழக ஆளுநராக சென்னா ரெட்டி இருந்தபோது, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தார். 

jayalalitha And Chenna reddy

1991-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நிலையில், 1993-ம் ஆண்டு சென்னா ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். தனது ஆட்சிக்கு பிரச்சனை தருவதற்காக அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவால் சென்னா ரெட்டி அனுப்பப்பட்டதாக ஜெயலலிதா எண்ணியதே இந்த பனிப்போருக்குக் காரணமென கூறப்பட்டது. 

மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த நபர்களின் பெயர்களை நிராகரித்தது, ஆர்.எஸ்.எஸ்ஸின் சென்னை அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து 3 மணி நேரம் வரை தகவல் தரவில்லை என கண்டனம் தெரிவித்தது,  1994-ம் ஆண்டின் முதல் சட்டமன்றத் தொடரை ஆளுநர் உரையின்றி தொடங்கியது, ஆளுநர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக ஜெயலலிதா குற்றம் சாட்டியது, பிரதமர் நரசிம்ம ராவை நேரில் சந்தித்து ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியது என ஜெயலிதாவுக்கும், சென்னா ரெட்டிக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாடுகள் பல.

டான்சி மற்றும் நிலக்கரி ஒப்பந்த ஊழல் தொடர்பாக ஜெயலலிதா மீது வழக்கு தொடர பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி அளித்த மனுவிற்கு ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கியதால், 1995-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதியன்று திருச்சி செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த ஆளுநரை அதிமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் முற்றுகையிட்டனர். 3 தினங்களுக்குப் பின் ஆளுநர் சென்னா ரெட்டி புதுச்சேரி சென்று கொண்டிருந்தபோது திண்டிவனம் அருகே அவரது கான்வாயை மறித்த அதிமுக தொண்டர்கள் முட்டை, கற்கள் மற்றும் காலணிகளை வீசினர். இந்த நிகழ்வைக் குறிப்பிட்டே ஸ்டாலின் பேசியுள்ளார்.

அடுத்ததாக ஸ்டாலின் கூறியது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி மீது நடத்தப்பட்ட தாக்குதல். டான்சி மற்றும் நிலக்கரி ஒப்பந்த ஊழல் தொடர்பாக  ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்த நிலையில், 1995-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணியன் சுவாமி பேசினார். அப்போது, ​​மேடை மீது அதிமுகவினர் ஆசிட் பல்புகள், கற்கள் மற்றும் சோடா பாட்டில்களை வீசினர்.  இவ்வழக்கின் விசாரணை நடைபெற்ற போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அதிமுக தொண்டர்கள் சுப்பிரமணியன் சுவாமியை தாக்க முயன்றதை சுட்டிக் காட்டிதான் தற்போது ஸ்டாலின் பேசியுள்ளார்.

Subramaniyan Swamy with Chandralekha

அடுத்ததாக பெண் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு. ‘டிட்கோ’ என அழைக்கப்படும் தமிழ்நாடு தொழிற்துறை மேம்பாட்டுக் கழகத்தின் சேர்மேனாகப் பதவி வகித்து வந்த சந்திரலேகா, ஸ்பிக் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை தமிழக அரசு குறைந்த விலைக்குத் தனியாருக்கு விற்க முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பேச்சு எழுந்தது. இதன் விளைவாக அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. 1992 மே 19-ம் தேதி எழும்பூர் சிக்னலில் சந்திரலேகாவின் கார் நின்று கொண்டிருந்தபோது கார் கண்ணாடி திறந்திருந்ததைப் பயன்படுத்தி, அவரது முகத்தில் ஆசிட் வீசப்பட்டது.  தமிழக காவல் துறையால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு பின்னர் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மும்பையை சேர்ந்த கூலிப்படையினர் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டனர். இன்று வரையில் இந்த தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.

இந்தியத் தேர்தலின் சீர்திருத்தவாதி என்றும், அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் என்றழைக்கப்படும் டி.என்.சேஷன் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது கடந்த 1995-ம் ஆண்டு சென்னைக்கு வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 6 மணி நேரம் அவர் விமான நிலையத்திலேயே இருக்க நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தங்கியிருந்த ஹோட்டலையும் முற்றுகையிட்டு அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

TN Seshan

ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டது மட்டுமின்றி, 1991-1996 வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது முக்கியப் பிரமுகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மூத்த வழக்கறிஞர்கள் கே.எம்.விஜயன், சண்முக சுந்தரம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த அனந்த கிருஷ்ணன் ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை.

மேலும் படிக்க | ஆளுநர் உரைகள்..சர்ச்சைகள்...திமுக பதிலடிகள்..!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News