காவி உடையில் திருவள்ளூர்... ஆளுநருக்கு முதல்வர் கொடுத்த அதிரடி பதிலடி - முழு பின்னணி
CM Stalin vs Governor RN Ravi: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படம் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவி பதிவிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
CM Stalin vs Governor RN Ravi: திருவள்ளுவர் தினம் ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாட்டுப் பொங்கலான இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் விதமாக பல தலைவர்கள் இன்று இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின் தாக்கு
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திருவள்ளுவர் தினத்திற்கு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,"தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி" என அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பதிவில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவியின் பதிவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: கோல்டு காயின்களை வாரி வழங்கிய மதுரை அமைச்சர்கள்
ஆளுநர் ஆர்.என். ரவி தற்போது ராமநாதபுரத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ளார். அங்கு அவர் காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் திருவுறுவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். மேலும், திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படம் மூலம் X தளத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி பதிவிட்டிருந்தார். அதில்,"திருவள்ளுவர் தினத்தில் ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அதில் அவர்,"அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இதைதான், 133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் அவரது பதிவில் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும், ஆளுநர் காவி உடையில் திருநீற்றுடன் இருக்கும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை உடையில் வெறும் நெற்றியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கருத்தியல் ரீதியிலான மோதல், அரசியல் நிர்வாக ரீதியிலான பிரச்னைகள் என ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே முரண்கள் பெருகி வந்த நிலையில், திமுக அரசு ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தது. அதாவது, பல கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார் என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்என் ரவி ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்பின் இரு தரப்பிலும் அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது திருவள்ளுவர் தினத்தில் மீண்டும் பூகம்பம் வெடித்துள்ளது தமிழ்நாட்டு அரசியலிலும் புயலை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்க | திமுகவை தோற்கடிக்க அருமையான சந்தர்ப்பம் - எடப்பாடி கொடுத்த சிக்னல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ