ஆளுநர் குறித்து 15 பக்கத்திற்கு புகார்... ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்!
CM Stalin Letter To President: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
CM Stalin Letter To President: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு விரிவடைந்துகொண்டு வருகிறது என்றுதான் கூறவேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பல்வேறு மசோதாக்களையும், கோப்புகளையும் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்திவருவதாக ஆரம்பத்தில் ஆளுநர் ஆர். என். ரவி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆளுநர் ரவி பொதுவெளியில் அரசியல் கருத்துகளை தெரிவித்துவருவதாகவும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டியும் வந்தனர். ஒருகட்டத்தில், அரசின் முக்கிய மசோதாக்களை கையெழுத்திடவில்லை என கூறி ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரச்னை கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து இது புகைந்துகொண்டே இருந்ததாக கூறவேண்டும். அரசு - ஆளுநர் ஆகியோருக்கு இடையேயான இந்த பிரச்னை தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை தொடர்ந்து மீண்டும் உச்சம் தொட்டது எனலாம்.
செந்தில்பாலாஜி பிரச்னை
கடந்த மாதம், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அவரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு செந்தில்பாலாஜியின் மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
அமைச்சரவையில் இருந்து நீக்கம்?
முதலில், முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்தார். அதாவது, அந்த பரிந்துரையில் உடல்நலக்குறைவு என கூறப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டு, கைது நடவடிக்கைகள் முதலமைச்சரின் பரிந்துரையில் குறிப்பிடப்படவில்லை என ஆளுநர் தெரிவித்திருந்தார். இருப்பினும், முதமைச்சரின் பதில் கடிதத்தை அடுத்து, ஆளுநர் இலாக்கா மாற்ற பரிந்துரையை ஏற்றாலும், இலாக்கா இல்லா அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர முடியாது என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், செந்தில்பாலாஜி இலாக்கா இல்லா அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியிலான அரசாணையை வெளியிட்டது. தொடர்ந்து, செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் தரப்பில் உத்தரவு வெளியானது, இருப்பினும் உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலையீட்டின்பேரில் அந்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. ஆளுநர் இந்த உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீண்ட விளக்க கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
இந்த சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் மீதான 15 பக்க புகார் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில், "ஆளுநருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, பின்னர் உத்தரவை நிறுத்தி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென முதலமைச்சரும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். இந்த நிலையில், ஏழு நாள் பயணமாக, டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து, தமிழக அரசியல் சூழல், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.