ஆளுநர் தேநீர் விருந்து: அமைச்சர்களுடன் பங்கேற்ற ஸ்டாலின்... இபிஎஸ் ஓபிஎஸ் ஆப்சென்ட்
TN Governor Tea Party: தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என். ரவியின் குடியரசு தின தேநீர் விருந்து பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
TN Governor Tea Party: 2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரே தமிழ்நாட்டில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது எனலாம். நீண்ட நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட திமுகவினருக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் நிலவி வந்த மோதல் போக்கு அதன் உச்சக்கட்டத்தை எட்டியது, அந்த கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின்போதுதான்.
அன்றைய நிகழ்வு தமிழ்நாடு அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சட்டப்பேரவை நிகழ்வில் தேசிய கீதம் எழுப்பப்படுவதற்கு முன்னரே ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியது தொடங்கி, ஆளுநர் மாளிகையின் பொங்கல் வாழ்த்து வரை பல நிகழ்வுகள் அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் போக்கை வெளிச்சமிட்டு காட்டின. இணையத்திலும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரை எதிர்த்து போராட்டமும் நடத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
அதை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி மீதான புகார் கடிதத்தை திமுகவினர் குடியரசு தலைவரிடம் அளித்தனர். அதனை குடியரசு தலைவர் மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் டெல்லிக்கு விரைந்தார். டெல்லியில் இருந்து வந்த பின், ஆளுநரின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் இருந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும் படிக்க | பழனி கும்பாபிஷேகத்தில் பழனி ஆதீனம் புலிப்பாணி சித்தர் புறக்கணிப்பதாக அறிவிப்பு!
ஆளுநரின் பொங்கல் வாழ்த்தில் இடம்பெறாத தமிழ்நாடு இலச்சினை, டெல்லி பயணத்திற்கு பின் வந்த குடியரசு தின வாழ்த்தில் இடம்பெற்றிருந்தது. மேலும், குடியரசு தினத்திற்கு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட வாழ்த்து வீடியோவின் இறுதியில் 'தமிழ்நாடு வாழ்க' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், அனைத்திற்கும் உச்சமாக குடியரசு தின தேநீர் விருந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து, அழைப்பு விடுத்ததும் பெரும் திருப்பமாக பார்க்கப்பட்டது. இதில், திமுக கூட்டணி கட்சிகள் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், திமுக பங்கேற்குமா என்ற கேள்வி இருந்தது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற குடியரசு தின தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு, ஐ. பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.
நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலினும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பரஸ்பரம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். கடந்த பொங்கல் விழா ஆளுநர் விருந்தில் பங்கேற்ற இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தமிழ்நாடு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் உள்பட திமுகவினர் பங்கேற்றிருப்பது மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | 'தமிழ்நாடு வாழ்க' குடியரசு தின விழா அணி வகுப்பில் முதலில் வந்த வாகனம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ