மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தை தட்டிக் கழித்துவிட்டது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை, தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் மீதி கரிசனம் காட்ட துடிக்கின்றனர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தான் முதல்வராக பதவியேற்ற பிறகு 3,000 ஏரிகள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தாம் செயல்படுத்தியிருப்பதாக குறிப்பிட்ட பழனிசாமா அவர்கள், தாம் ஒரு விவசாயி என்பதால், நீரை சேமிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதுதான் தனது முதல் கடமை எனவும் தெரிவித்தார்.


இதற்கிடையில் திமுக-வின் தேர்தல் அறிக்கை குறித்து பேசிய அவர், திமுக-வின் அறிக்கை பொய்யறிக்கை என்றும், வெற்று அறிக்கை என்றும் குற்றம்சாட்டினார். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்தபோது, தமிழ்நாட்டிற்கு, திமுக எதுவும் செய்யவில்லை என்றார். 


இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். திமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டும், மின் உற்பத்தி பற்றாக்குறையும் நிலவியதாக குறிப்பிட்ட அவர், 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்று, மின் உற்பத்தி திட்டங்களை ஊக்குவித்து, தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியது என குறிப்பிட்டு பேசினார்.


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான குற்றம்சாட்டை முன்வைப்பதாக குறிப்பிட்ட அவர், மதுரை உள்ளிட்ட ஊர்களில், பரப்புரையின்போது, மு.க.ஸ்டாலின், மிகவும் சுதந்திரமாக மேற்கொள்ளும் நடைபயணமே, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கும் சிறப்பாக பரமாரிக்கப்படுவதற்கு சான்று எனவும் தெரிவித்தார்.