காங்கிரஸ் வலுவாக இருக்கும் வரை நானும் பலமாக இருப்பேன்: ப.சிதம்பரம் ட்வீட்
இன்று திருமதி சோனியா காந்தி மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் என்னைப் பார்க்க வந்ததை நான் மதிக்கிறேன்.
புதுடெல்லி: ஐ என்எக்ஸ் மீடியா வழக்கில் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேரில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பை அடுத்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், அவர்களுக்கு "நன்றி" கூறியுள்ளார். மேலும் அவர்களை தான் மதிப்பதாகக் கூறிய அவர், மத்திய அரசையும் கடுமையாக சாடியுள்ளார்.
தற்போது டெல்லி திகார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் அவரின் சார்பாக அவரின் குடும்பத்தாரை தனது கருத்தை பகிருமாறுக் கூறியுள்ளார். அன்று முதல் அவ்வப்போது அவரின் சார்பாக கருத்து பகிரப்படுகிறது.
இன்று அவரின் சார்பாக கூறப்பட்டதாவது, "எனது சார்பாக ட்வீட் செய்ய எனது குடும்பத்தினரிடம் கேட்டேன்:
இன்று திருமதி சோனியா காந்தி மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் என்னைப் பார்க்க வந்ததை நான் மதிக்கிறேன். காங்கிரஸ் கட்சி வலுவாகவும் தைரியமாகவும் இருக்கும் வரை நானும் பலமாகவும் தைரியமாகவும் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக மற்றொரு ட்வீட்டில், வேலையின்மை, குறைந்த ஊதியம், வன்முறை கும்பல், காஷ்மீரில் கதவடைப்பு, தற்போதுள்ள வேலைகளை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைப்பது போன்ற செயல்களை தவிர, மற்ற அனைத்தும் இந்தியாவில் நன்றாகவே உள்ளது என மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார்.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாகவும், அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அதற்கு உதவி செய்ததாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.