மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்றதாக தொடரப்பட்ட வழக்கில், வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு எதன் அடிப்படையில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்றதாக, மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளளனர். இந்த மனுவில் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில், 85% இடங்கள் மாநில மாணவர்களுக்கும், 15% இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2,744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டு நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் 126 வெளிமாநில மாணவர்கள் பங்கேற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே 2019 - 20ம் ஆண்டிற்கான கலந்தாய்வை தமிழக மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் செயலர் ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.


அதேவேளையில் தமிழக இளங்கலை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்குவதோடு, புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த மனு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, வெளி மாநில மாணவர்கள் என கூறப்படும் 126 மாணவர்களை வழக்கில் சேர்த்த நீதிமன்றம், அவர்களின் இருப்பிடச்சான்று குறித்தும், எதன் அடிப்படையில் அவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர் என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டது.


இந்நிலையில் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையாக பரிசீலிக்கப்பட்ட பிறகே, கலந்தாய்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, முறையாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருந்தாலும், சில முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் அது குறித்த விபரங்களை அறிய நீதிமன்றம் விரும்புகிறது எனவும் தெரிவித்தார். மேலும் அதன் அடிப்படையிலேயே 126 பேரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.


அவர்களில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர் எனக் குறிப்பிட்ட நீதிபதி,
அவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அரசுத்தரப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்ற பிற மாநில மாணவர்கள் என கூறப்படும் 126 பேரும் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு 2 வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தார்.